இருக்கன்குடியில் மர்மமான முறையில் பலியாகும் பன்றிகள்
சாத்துார், : சாத்தூர் இருக்கன்குடி ஊராட்சியில் மர்மமான முறையில் பன்றிகள் அடுத்தடுத்து பலியாகி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
சாத்துாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெருக்களின் ஓரங்களிலும் ஆற்றுப்பகுதிகளிலும் பன்றிகள் இறந்து கிடந்தன. புதிய வகை பன்றி காய்ச்சல் பன்றிகளுக்கு இடையே பரவியதால் பன்றிகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.
இதனால் துர்நாற்றம் வீசியது இதை தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இறந்த பன்றிகள் மீது பினாயில் ஊற்றி அகற்றினர்.
தற்போது இருக்கன்குடி ஊராட்சி பகுதியிலும் இதே போன்று பன்றிகள் மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி ஆங்காங்கே இறந்து வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக பத்துக்கு மேற்பட்ட பன்றிகள் இறந்துவிட்டன. பன்றிகள் இறப்பை கட்டுப்படுத்த கால்நடைத்துறையினரும், நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினரும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை கூறியதாவது: இருக்கன்குடியில் பலர் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பன்றிகள் உயிரோடு இருக்கும் போது உரிமை கொண்டாடி சண்டை போட்டுக் கொள்ளும் இவர்கள் இறந்த பன்றிகளுக்கு உரிமை கொண்டாடுவது கிடையாது.
ஊராட்சியில் துப்புரவு பணியை மேற்கொள்ள மூன்று பணியாளர்களை உள்ளனர் இவர்களைக் கொண்டு ஊராட்சியில் உள்ள குப்பைகளையும் இறந்து கிடக்கும் பன்றிகளையும் அகற்றுவது மிகுந்த சிரமமாக உள்ளது. பன்றிகள் இறந்தால் உரிமையாளர்களே எடுத்து அடக்கம் செய்ய வேண்டும் இதற்குரிய உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!