கிரைம் கார்னர்
ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஷிவமொகா டவுன் சவாய்பாளையாவை சேர்ந்தவர் முகமது பைசல், 19. இலியாஸ் நகரில் வசித்தவர் அஞ்சும்கான், 19. நண்பர்களான இருவரும் கல்லுாரி மாணவர்கள்.
நேற்று மதியம் குருபரபாளையா பகுதியில், ஓடும் துங்கா ஆற்றில் கரையில் அமர்ந்து மீன் பிடித்தனர். எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தனர். நீச்சல் தெரியாமல், ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பம்ப்செட் திருடிய இருவர் கைது
தாவணகெரே ஹரிஹரா போலீசார், திருட்டு வழக்கில், இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர்கள் சையது கலந்தர், 24, சையது அலியாஸ், 22 என்பது தெரிந்தது.
இவர்கள் இருவரும் விவசாய நிலங்களில் இருந்து, மோட்டார் பம்ப்செட்டுகளை திருடியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 மோட்டார் பம்ப்செட்டுகள், பறிமுதல் செய்யப்பட்டன.
சூட்கேசில் பெண் பிணம்
குடகு விராஜ்பேட் மாகுட்டா வனப்பகுதி வழியாக, கேரளாவுக்கு சாலை செல்கிறது. நேற்று காலை வனப்பகுதிக்குள், ஒரு சூட்கேஸ் கிடந்தது. அந்த சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியதால், வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் பெண் பிணம் இருந்தது. அந்த பெண்ணுக்கு 25 முதல் 30 வயது இருக்கும். அவர் யார் என்று தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பே அவர் கொலையானது தெரிந்தது. விசாரணை நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!