பள்ளி மேலாண்மை குழுக்களை பலப்படுத்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவை
மாவட்டத்தில் 988 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் உள்ளன. மாணவர்களின் பெற்றோரை கொண்டு 20 நபர் குழுவாக இயங்கும் இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். தலைமை ஆசிரியர் இக்குழுவுடன் இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் தொட்டி, கட்டட சேதத்தை சீரமைத்தல், பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இக்குழுக்களில் பல சிக்கல்கள் உள்ளதால் அதை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 20 நிர்வாகிகள் அமைக்கும் அளவுக்கான வருகை பதிவு உள்ள பள்ளிகள் உள்ள சூழலில், 15, 10, 5 என குறைந்த மாணவர்கள எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளும் ஊர்ப்புறங்களில் உள்ளன. இதனால் அது போன்ற பகுதிகளில் இக்குழுக்களை முழுமையாக அமைக்க முடிவதில்லை.
மேலும் சில குழுவில் ஏழை மாணவர்களின் படிப்பறிவு இல்லாத பெற்றோரே இருப்பதால், தலைமை ஆசிரியர்கள் கூறுவதற்கு ஒப்பு கொள்கின்றனர். சில இடங்களில் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இன்னொரு பக்கம் பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது, இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, வீடு வீடாக சென்ற உயர்கல்வி செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை படிக்க வைப்பது போன்றவற்றை இலக்காக வைத்து இவர்களது செயல்பாடுகளை நீட்டிப்பு செய்யலாம்.
ஊர்ப்புற பள்ளிகளின் மேலாண்மை குழுவில் இருப்போர் கூலி தொழிலாளர்களாக இருப்பதால் மதியம் 3:00 மணிக்கு பள்ளிகளில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே பள்ளிக்கல்வித்துறை இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்களை கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களது அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!