தமிழகத்திற்கு நீர் திறப்பு விவகாரம் டில்லியில் இன்று சித்து ஆலோசனை
தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று டில்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நேற்று முதல் 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, வினாடிக்கு 5,232 கன அடி நீர் நேற்று திறந்து விடப்பட்டது. இந்த நீர், இன்று மாலை தமிழகத்தின் பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டில்லியில் இன்று உயர்மட்ட ஆலோசனை நடக்க உள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர் உட்பட உயர் அதிகாரிகள் நேற்றிரவு விமானம் மூலம் டில்லி சென்றனர்.
டில்லியில் இன்று நடக்கும் கூட்டத்தில், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்.பி.,க்கள், நீர்ப்பாசன துறை வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர்.
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் காவிரி விஷயம் தொடர்பாக குரல் எழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!