மிளகாய் பொடி கலந்த வெந்நீரை கணவர் மீது ஊற்றிய மனைவிக்கு வலை
உடுப்பி : இன்னொரு பெண்ணுடன், கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில், கணவர் மீது மிளகாய் பொடி கலந்த, வெந்நீரை மனைவி ஊற்றியுள்ளார். சிகிச்சை பெற விடாமல், வீட்டிற்குள் சிறை வைத்த, கொடூரமும் அரங்கேறியுள்ளது.
உடுப்பியின் கார்கலாவை சேர்ந்தவர் முகமது ஆசிப், 22. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு, உடுப்பி டவுன் மணிப்புராவை சேர்ந்த அப்ரீன், 20, என்பவரை திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டும், கணவர் வீட்டில், அப்ரீன் இருந்தார். பின் தாய் வீட்டிற்கு சென்றார். அதன்பின்னர் முகமது ஆசிப்பும், மனைவி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்னொரு பெண்ணுடன், முகமது ஆசிப்புக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகித்தார்.
கடந்த 17ம் தேதி மாலை 5:45 மணிக்கு குளியலறையில், முகமது ஆசிப் குளித்து கொண்டு இருந்தார். அப்ரீன் கதவை தட்டினார்.
கதவை திறந்ததும் மிளகாய் பொடி கலந்த, கொதிக்கும் வெந்நீரை முகமது ஆசிப் மீது ஊற்றினார்.அவர் அலறி துடித்தார்.
அவரை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் அப்ரீன், அவரது தந்தை லத்தீப், தாய் மைமூனா ஆகியோர் ஒரு அறையில் பூட்டி சிறை வைத்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த அறையில் இருந்து, முகமது ஆசிப் தப்பினார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். வெந்நீர் ஊற்றியதில் அவருக்கு, பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். சம்பவம் பற்றி அறிந்த காபு போலீசார், மருத்துவமனைக்கு சென்று, முகமது ஆசிப்பிடம் விசாரித்தனர்.
அவர் அளித்த புகாரின்படி, மனைவி, மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!