பெங்களூரு: தொழில் அதிபரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மடாதிபதி அபினவ ஹாலஸ்ரீ, ஒடிசாவில் ஓடும் ரயிலில் கைது செய்யப்பட்டார்.
உடுப்பியை சேர்ந்தவர் கோவிந்த பாபு பூஜாரி; தொழிலதிபர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பைந்துார் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
பா.ஜ.,வில் சீட் வாங்கி தருவதாக கோவிந்த பாபு பூஜாரியிடம், ஹிந்து அமைப்பின் பெண் பிரமுகர் சைத்ரா குந்தாபுரா, ஹாலஸ்ரீ மடத்தின் மடாதிபதி அபினவ ஹாலஸ்ரீ சுவாமிகள் உள்ளிட்ட சிலர் 5 கோடி ரூபாய் வாங்கி, ஏமாற்றினர்.
சைத்ரா குந்தாபுரா
இதுகுறித்த புகாரின்படி, சைத்ரா குந்தாபுராவை கடந்த 13ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர் கைது செய்யப்பட்டதும் மடாதிபதி அபினவ ஹாலஸ்ரீ தலைமறைவாகி விட்டார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஒடிசாவிலும் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து, பீஹாரின் புத்த கயாவுக்கு, அபினவ ஹாலஸ்ரீ நேற்று முன்தினம் ரயில் மூலம் தப்பி சென்றார்.
இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கட்டாக் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் உதவியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நாடினர்.
நேற்று காலை 10:30 மணிக்கு ரயில், கட்டாக் ரயில் நிலையம் சென்றது.
காசி திட்டம்
அந்த ரயிலில் ஏறிய போலீசார், டி - ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து மாறுவேடத்தில் இருந்த, அபினவ ஹாலஸ்ரீயை கைது செய்தனர். பின், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன்பின்னர் கட்டாக்கில் இருந்து விமானம் மூலம், அபினவ ஹாலஸ்ரீயை பெங்களூரு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சைத்ரா குந்தாபுரா கைதானதும், விஜயநகராவில் இருந்து மைசூருவுக்கு காரில் தப்பிய மடாதிபதி, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு பஸ்களில் சென்று உள்ளார். ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் சென்றவர், அங்கிருந்து ரயில் மூலம் ஒடிசா சென்றுள்ளார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து ரயில் மூலம், புத்த காயாவுக்கு தப்பி சென்று, அங்கிருந்து காசிக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க, பல மொபைல் போன்கள், சிம் கார்டுகளை பயன்படுத்தி உள்ளார். அவரை இன்று நீதிமன்றத்தில், போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!