போடி : போடி நகராட்சி 17 வது வார்டில் பூங்கா பராமரிப்பின்றி மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழ்கிறது.
இந்த வார்டில் ரோடு குண்டும், குழியுமாகவும், முறையாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு கடியால் அவதியுறுவதாக குடியிருப்போர் குமுறுகின்றனர்.
போடி நகராட்சி 17 வது வார்டில் பேச்சியம்மன் கோயில் தெரு, வடக்கு, கிழக்கு மறவர் காளியம்மன் கோயில் தெரு, சவுந்திரவேல் தெரு, பேட்டை தெரு, தியாகி கருப்பையா சந்து, கிழக்கு வெளி வீதி, சொக்கன் சந்து.
அழகர் சந்து உள்பட பல்வேறு தெருக்களில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடக்கு காளியம்மன் கோயில் தெரு குடியிருப்போர் நிர்வாகிகளான காளியம்மாள், பழனியம்மாள், முனியம்மாள், ராமமூர்த்தி, ராசு ஆகியோர் கூறியதாவது :
சாக்கடை, ரோடுவசதி இல்லை
வடக்கு காளியம்மன் கோயில் தெருவில் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. சொக்கன் சந்தில் சாக்கடை தடுப்புகள் சேதம் அடைந்து சீரமைக்காததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி கொசு அபரீதமாக உற்பத்தியாகி தொல்லை அதிகரித்து வருகிறது.
தெருக்களில் குப்பை அகற்றவும், சாக்கடை தூர்வார துப்புரவு பணியாளர்கள் சரிவர வருவதில்லை. மறவர் சாவடி அருகே முறையாக சாக்கடை தடுப்புகள் அமைக்காததால் பெரும் பள்ளமாக உள்ளது.
இரவில் பள்ளம் தெரியாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும், குடிநீர் பைப்லைன் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, சாக்கடை தடுப்புகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைக்காத சிறுவர் பூங்கா
தேனியில் இருந்து போடிக்கு நுழையும் போது போஜன் பார்க் பஸ் ஸ்டாப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பூங்கா உள்ளது.
தற்போது பூங்கா பரமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது.
இதனால் இரவில் மதுப் பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. இந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிக்காத வகையில் சுற்றி தடுப்புச்சுவருடன் இரும்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
சமூக விரோதிகள் சிலர் வேலியை சேதப்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக விளங்கி வருகிறது. இப் பகுதியில் அங்கன்வாடி மையம் இல்லாததால் அடுத்த வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப வேண்டியதுள்ளது.
கிழக்கு வெளி வீதியில் அமைந்துள்ள சுகாதார வளாகம் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளதால் பெண்கள் செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
சிறுவர்களுக்கான பூங்கா, அங்கன்வாடி மையம் அமைக்கவும், சாக்கடை, ரோடு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!