ADVERTISEMENT
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் வேலை உறுதித்திட்டத்தில் கான்கிரீட் உறையுடன் பாசன கிணறுகள் அமைத்து கொடுக்கப்படும் நிலையில் ஏராளமான விவசாயிகள் தங்களுக்கும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தற்போது பல்வேறு வேலைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் விவசாயத் கூலியாட்கள் கிடைக்காமல் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டாலும், சில விஷயங்களில் பயன் தருகிறது. தற்போது விவசாய நிலங்களில் பாசன கிணறுகள் அமைப்பதற்காக இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பல ஊராட்சி நிர்வாகங்கள் ஆர்வம் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் வேலையை பாதியிலேயே போட்டுவிட்டால் திட்டம் கேள்விக்குறியாகும் என்ற அச்சமே அதற்கான காரணமாக இருந்தது.
இந்நிலையில் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு 3 கிணறுகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஒடுவன்பட்டி ஊராட்சி நிர்வாகமே அந்த 3 கிணறுகளையும் பயனாளிகளுக்கு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒரு கிணறுக்கு ரூ. 7.48 லட்சம் மதிப்பில் 25 அடி விட்டம், 40 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டப்பட்டு மேல் பகுதியில் கான்கிரீட் உறை அமைத்து கொடுக்கப்படுகிறது. இடத்திற்கும் நிலத்தடி நீருக்கும் தகுந்தாற்போல் நீள அகலங்கள் மாற்றியமைத்தும் கொடுக்கப்படுகிறது. தற்போது கிணறுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பகுதி விவசாயிகள் தங்களுக்கும் இத்திட்டத்தில் கிணறுகள் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்த துவங்கியுள்ளனர்.
பாகையா, விவசாயி, ஒடுவன்பட்டி: நிலத்தடி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த சிரமப்பட்டு வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இத்திட்டம் குறித்து தெரிவித்தார்கள். நாங்களும் சரி என்று கூறினோம். எங்களுக்கு எந்த செலவும் இல்லாமல் அவர்களே கிணற்றை அமைத்து கொடுத்துள்ளார்கள். மாநில அரசு விவசாய மின் இணைப்புக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!