பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காங்., - ம.ஜ.த., தலைவர்கள் வரவேற்பு
பெங்களூரு, : லோக்சபா, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பல்வேறு கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்த இடஒதுக்கீட்டை கொண்டுவர அயராது உழைத்தது.
எனவே, இதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். அதேவேளையில், பஞ்சாயத்து அளவில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தோம்.
அன்றைய தினம், இந்த மசோதா ராஜ்யசபாவில் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக, லோக்சபாவில் நிறைவேற்ற முடியவில்லை. இந்த மசோதாவை ஒன்பது ஆண்டுகளுக்கு பின், பிரதமர் மோடி கொண்டு வருகிறார்.
இதை அவர் முதன் முறையாக பிரதமரான போதே கொண்டு வந்திருக்கலாமே. அப்போது அவர்களுக்கு முழு பெரும்பான்மை இருந்ததே. அரசியல் ஆதாயத்துக்காக, தற்போது இதை கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கனவு, 27 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. 1995ல் கர்நாடக முதல்வராக தேவகவுடா இருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடதுக்கீடு அளித்து, பெண்களுக்கு அதிகாரம் என்ற அத்தியாயத்தை தொடங்கினார். இதை நாடே வியந்து பார்த்தது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, 1996 செப்., 12ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்களுக்கு சம உரிமை, வாய்ப்பு வழங்குவது இன்றைய அவசியம்.
பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை எடுத்த முடிவு பாராட்டுக்குரியது.
அரசியல் இல்லாமல், இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!