Load Image
Advertisement

எம்.எல்.ஏ.,க்களின் குறைகளுக்கு செவி சாய்ப்பார்களா அமைச்சர்கள்?



கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் நிறைவு பெறுகிறது. மாநிலத்தின் 31 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை ஒதுக்கி மூன்றரை மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், அமைச்சர்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே முதல்வர் சித்தராமையாவிடம் பல முறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் புகார் கூறினர்.

அவரும் மாவட்ட வாரியாக அமைச்சர்களையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களையும் நேருக்கு நேர் அமர வைத்து பஞ்சாயத்து நடத்தினார். அப்போது, ஒவ்வொரு தொகுதி வளர்ச்சிக்கும், 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிறைய எதிர்பார்த்தும், குறைவாகவே கிடைத்தது. அதன் பின்னும் எந்த பயனும் இல்லை என்று கூறி, அமைச்சர்கள் மீது மீண்டும் முதல்வரிடம் அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

இதையடுத்து, அமைச்சர்களுக்கு இரண்டாவது முறையாக முதல்வர் அறிவுரை கூறி, எம்.எல்.ஏ.,க்களுடன் அனுசரித்து போகும்படி கூறினார். ஆனாலும் ஆளுங்கட்சியின் பல எம்.எல்.ஏ.,க்களுக்கு இன்னமும் தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படவில்லை என்று அங்கலாய்ப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இனி டில்லி தலைவர்களிடம் முறையிட்டால் தான் பருப்பு வேகும் என்று கணித்துள்ளனர். இன்னும் ஏழெட்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், உட்கட்சி பூசல் தொடர்ந்தால் கட்சிக்கு தான் இழப்பு என்பதை டில்லி தலைவர்களுக்கு புரிய வைக்க திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின், புத்துணர்ச்சி பெற்றுள்ள காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால், அதே கர்நாடக தலைவர்களின் உட்கட்சி பூசலால், லோக்சபா தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தலைவர்கள், அமைச்சர்களுக்கு மொபைல் போன்களிலேயே உத்தரவு பறக்கிறதாம்.

வட மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தான் அதிகமானோர் அமைச்சர்கள் மீது புகார் கூறுவது வாடிக்கையாக உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவும் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பொது செயலர்கள் வேணுகோபால் ஆகியோர் கர்நாடக அரசியல் சூழ்நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, சில மாதங்களாக இருக்கும் இடமே தெரியவில்லை.

இந்தாண்டு இறுதிக்குள் மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடக்க உள்ளதால், தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என்று டில்லி தலைவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளனர். இதற்கு அவரவர் பகுதிகளில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை முடிப்பதற்கு நிதி தேவை. இந்த நிதியை தான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வழங்கும்படி கேட்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தங்கள் தொகுதி மீது மட்டும் கவனம் செலுத்துகின்றனரே தவிர, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்ற புகார் உள்ளது.

இப்படி ஒரு பக்கம் சொந்த கட்சிகாரர்களின் நெருக்கடி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியினரின் போராட்டம் என ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களிலேயே முதல்வர் சித்தராமையாவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.



- நமது நிருபர் -


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement