ADVERTISEMENT
சி.முத்துலட்சுமி, ஆசிரியர், சிவகங்கை: கால் நுாற்றாண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்த மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசோதா.இது பெண்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல். 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது பெண்கள் அனைவராலும் வரவேற்கத்தக்க விஷயம். இருப்பினும் ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது வெறும் காகிதத்தில் வார்த்தை ஜாலமாய் மட்டும் இருக்கிறது. இது இன்று எங்களுக்கு சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெறுகிறோம். மகளிர் ஒதுக்கீடு மசோதாவுக்கு குரல் கொடுத்தவர்களுக்கும் இதை கொண்டுவந்த மத்திய அரசுக்கும் நன்றி.
சி.ஊர்மிளா, சுயவேலைவாய்ப்பு மைய பயிற்றுனர், காரைக்குடி: பெண்கள் எவ்வளவு தான் படித்து உயர்ந்தாலும், பதவிகள் வகித்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உயர் பதவிகளிலும், உத்தரவிடும் பதவிகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த வகையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் எதிர்பார்த்து வரும் ஒரு முக்கிய மசோதாவாக உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.அனைத்து தரப்பட்ட பெண்களின் வாழ்வும் முன்னேற்றம் அடையும்.
எஸ்.ராக தீபா, குடும்பத்தலைவி, ராம்நகர், மானாமதுரை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மகளிர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்கிறது. 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவினால் மேலும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏராளமான பெண்கள் விறகு அடுப்புகளை கொண்டு சமையல் செய்து வந்த நேரத்தில் தற்போது இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள குக்கிராமங்களில் கூட சமையல் காஸ் சிலிண்டர்களை கொண்டு சமையல் செய்து வருகின்றனர்.
விவசாயிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் என பல்வேறு தரப்பட்ட பெண்களும் பயனடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் அரசியலிலும் பெண்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி தாக்கல் செய்த இந்த மசோதாவினால் மேலும் பெண்களுக்கு சமூக மற்றும் சம உரிமை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மு.ஜெயமணி, பேராசிரியை, தேவகோட்டை: நாட்டில் இறையாண்மைக்கு சான்றாக விளங்கும் புதிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி அடித்தளம் தொட்டு உயர்மட்டம் வரை பெண்களின் ஆளுமையை இந்திய நாடு அங்கீகரிக்கிறது என்பதற்கு சான்றாக இம்மசோதா விளங்குகிறது. உள்ளாட்சிகளில் பெண்கள் தங்களின் ஆளுமையை சிறப்பாக செய்து வருவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
பெண்களின் இட ஒதுக்கீடு தொடர்பான இம்மசோதா பெண்களுக்காக புதிய விதிகளையும், புதிய வழிகளையும் நிச்சயமாக கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீட்டை பெற்று மேலும் தங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து ஒவ்வொரு பெண்களும் தனக்கென தன் சொந்த காலில் நிற்பதற்கு முன்னோடியான இம்மசோதாவை இந்திய நாடே இரு கரம் கூப்பி வரவேற்கிறது.
மோனிஷா, பொறியியல் பட்டதாரி, திருப்புத்துார்: மகளிருக்கான 33 சதவீத சட்ட மசோதாவானது பார்லிமென்ட் நிறைவேற்றப்பட்டுள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதான். இந்த மசோதா பெண்களுக்கு அரசு துறையில் பல வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. மசோதாவின் முழு விபரம் அறிந்தால் தான் அதன் பலன்கள் முழுமையாக தெரியவரும். இது குறித்து பெண்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் உச்சபட்ச அங்கீகாரத்தை சட்ட வடிவாக பார்லிமென்டில் நிறைவேற்றிய பிரதமர் மோடி வணக்கத்திற்குரியவர். மகளிர் சார்பாக மனமார்ந்த நன்றி.
வெண்ணிலா வெங்கடேஸ்வரன், ஊராட்சி தலைவர், மருதிப்பட்டி: சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை இருந்து கொண்டே வருகிறது.
தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். இது சட்டமன்றங்களில் இன்னும் குறைவாகவே உள்ளது.
அதன் தேசிய சராசரி 14 சதவீதமாகத்தான் உள்ளது. எனவே 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.
இதை அனைத்து பெண்களும் கொண்டாட வேண்டிய ஒரு தருணம் ஆகும்.
இதன் மூலம் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சுய பிரதிநிதித்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமை கிடைக்கும். இனி எந்தவொரு விவாதமாகவோ சட்டமாகவோ இருந்தாலும் பெண்களை ஒதுக்கி வைத்து விட்டு விவாதிக்கவும் நிறைவேற்றவும் முடியாது.
பெண்களை ஒதுக்க முடியாது
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!