ADVERTISEMENT
கலபுரகி : ''பட்டியல் ஜாதியினர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள், இலவச திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அளித்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றவே, விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள் உத்தரவாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் அரசு வாக்குறுதியை நிறைவேற்ற, 11 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மானியம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
சமூக நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலன் பற்றி பேசும் முதல்வர் சித்தராமையா, இதற்கு பதில் சொல்ல வேண்டும். காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள் நீண்ட காலம் நீடிக்காது.
லோக்சபா தேர்தல் வரை வாக்குறுதி திட்டம் இருப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பர். ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும். சைத்ரா வழக்குக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பணத்துக்காக சீட் கொடுக்கும் கட்சி பா.ஜ., அல்ல. நான் சாதாரண தொழிலாளி.
கூலி வேலை செய்து கொண்டிருந்தேன். என்னை அங்கீகரித்து சீட் கொடுத்தனர். வெற்று பெற்று, நான்கு முறை அமைச்சரானேன். சைத்ரா குந்தாபூர் மீதான வழக்கு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கர்நாடகாவில் 195 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.
டிசம்பரில் டேங்கர் மூலம் தண்ணீர் வழங்கும் சூழ்நிலை ஏற்படும். வறட்சிக்கு மத்திய அரசே காரணம் என்ற மன நிலையில் முதல்வரும், வருவாய் துறை அமைச்சரும்உள்ளனர்.
மத்திய அரசு பணத்தை விடுவித்தால் தான், கர்நாடக மக்கள், தங்கள் வாழ்வை கட்டியெழுப்புவர் என்ற எண்ணத்தில் சித்தராமையா இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!