பள்ளி வளாகத்தில் போலீசார்
திருப்புவனம் : தினமலர் செய்தியை அடுத்து போலீசார் திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு நடத்தினர். திருப்புவனம் ஆண்கள் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து பயில்கின்றனர்.
கடந்த மூன்று மாதமாக மாணவர்கள் அவர்களுக்குள் கோஷ்டியாக மோதிக் கொள்வதுடன் வெளிநபர்களையும் அழைத்து வந்து தகராறு செய்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் காலி மருந்து பாட்டில், பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச், பான்பராக், ஹான்ஸ் பாக்கெட், காலி மதுபாட்டில் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் பெற்றோர் மத்தியில்அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன் தினம் செய்தி வெளியானதையடுத்து திருப்புவனம் போலீசார் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்தனர்.
போலீசார் தரப்பில் கூறுகையில்: பள்ளியில் இலவச சைக்கிள்களை இணைக்க வடமாநில கூலி தொழிலாளர்கள் 5 பேர் தங்கியிருந்துள்ளனர். பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து பள்ளி வளாகத்தில் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். பள்ளிக்கு இரவு காவல்காரர் இல்லாததால் வெளிநபர்கள் பள்ளி வளாகத்தில் வந்து மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என கருதுகின்றனர்.
பெற்றோர் தரப்பில் கூறுகையில்: மாணவர்களிடம் விசாரணை நடத்துவதை விட மாணவர்களை சோதனை செய்வது அவசியம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்களை வைத்து மாணவர்களிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் உள்ளிட்ட எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாது, என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!