காந்திஜி நகரில் அறிவிப்பில்லா மின் தடை தினமும் பல மணி நேரம் தொடர்வதால் மக்கள் அவதி
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திஜி நகரில் தினமும் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் திருச்சி ரோடு காந்திஜிநகர்,நந்தவனப்பட்டி சுற்றுப் பகுதிகளில் தினமும் அடிக்கடி ஏற்படும் அறிவிப்பில்லா மின்தடையால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் உடனடியாக வந்து விடும் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதனால் சிறு குழந்தைகளை வீட்டில் பராமரிக்கும் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை வேதனைபடுகின்றனர். தொடரும் இதே பிரச்னையால் குடியிருப்பு மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை கூட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து நேற்று காந்திஜி நகர் பகுதியில் மதியம் 3:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
இதனால் வீட்டிலிருக்கும் மக்கள் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என காத்திருந்தனர். ஆனால் இரவு 7:05 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் திணறினர். ஏற்கனவே காந்திஜி நகரில் ரோட்டோரத்திலிருக்கும் மின் விளக்குகளில் ஒருசில மின்விளக்குகள் எரிவதில்லை. இந்தநிலையில் நேற்று மழையால் 6:00 மணி முதலே இருள் சூழ மின்சாரமும் இல்லாமால் ஒட்டுமொத்த காந்திஜி நகரும் இருளில் மூழ்கியது. ஒருசிலர் தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மின்சாரம் எப்போது வரும் என மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபடி காத்திருந்தனர். தினமும் 10 க்கு மேற்பட்ட முறை இப்பகுதியில் முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின் தடையால் சாதாரண அலைபேசிக்கு சார்ஜ் கூட போட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதே நிலை நீண்ட நாட்களாக தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் கூறுகையில்,''அங்கு நகர் பகுதியில் மின்சார லைன் பிரேக் டவுண் ஆகிவிட்டது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் இதன் பணியில் ஈடுபட்டனர்.
அதை சரிசெய்வதற்காகதான் மின் தடை ஏற்படுத்தப்பட்டது. பணி முடிந்ததும் சப்ளை கொடுக்கப்பட்டு விட்டது,,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!