ADVERTISEMENT
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு
கோகிலவாணி,ஊராட்சி தலைவர், வீரராகவன்-சிறுகுடி : புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளர். இது விரைவாக சட்டமாக மாற உள்ளது. பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இதன் மூலம் எதிர்காலத்தில் பெண்களின் வளர்ச்சிக்கும், உரிமைகளை பெறவும், பெண்கள் அரசியலில் சாதனை படைக்கவும் வழிவகுக்கும். இதன் மூலம் பெண்கள் ஆளுமை மிக்க பதவிகளுக்கு வருவதால் ஜனநாயகம் வலுப்பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு அது பெரும் பங்கு வகிக்கும்.
..........
உரிமைகளை மீட்க பயனுள்ள மசோதா
சுதந்திரதேவி,வழக்கறிஞர்,திண்டுக்கல்: மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும்,சட்டசபையிலும் இடஒதுக்கீடு கேட்டு பல அமைப்புகள் போராடி வந்தன . இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். மத்திய அரசிற்கு ஒட்டுமொத்த பெண்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இது பாலின சமத்துவத்திற்கான பயணத்தின் முக்கியமான மைல் கல் ஆகும். பெண்களின் உரிமைகளை மீட்க இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும்.
.............
பெண்களுக்கான புரட்சி மசோதா
கே. மஞ்சுளா, கண்காணிப்பாளர், தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். புதிய பாராளுமன்ற கட்டடத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவாக பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடை இடம்பெற செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே ஒரு மாபெரும் புரட்சிகரமான திட்டமாகும். கல்வியில் சிறந்து விளங்கும் பெண்கள் விண்வெளி, ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட எத்தனையோ துறைகளில் சாதனை படைத்தாலும், அரசியலைப் பொறுத்தவரை அது ஆண்களின் ஆதிக்கத்திலே உள்ளது. மிகவும் சொற்பமான அளவிலே அரசியலில் பெண்களின் பங்களிப்பு உள்ளதை மாற்றி ,அரசியில் துறையில் சாதிக்க இந்த மசோதா உதவும். இதை உழைக்கும் மகளிர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.
....
வரலாற்று சிறப்புமிக்க நாள்
விஜயலட்சுமி, தொழில் முனைவோர்,பழநி: பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா மத்திய அரசால் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்திற்கும் மனோ தைரியத்திற்கும் உறுதுணையாக இருக்கும் .சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் .தேர்தலில் கிடைக்கும் 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்களின் ஆளுமையை மேம்படுத்தும். இந்த மசோதா கொண்டு வந்ததன் மூலம் பெண்களுக்கு இந்தாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்.
..........
பாகுபாடின்றி அமைய வேண்டும்
சிவ.சிலம்பரசி, ஆசிரியை, திண்டுக்கல்:இது பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் குறித்த விஷயமாக இருக்கிறது. இந்த பெண்கள் மசோதா நீண்ட காலமாக நிலுவையில் இருந்திருக்கிறது. ஆரம்பம் நன்றாகதான் இருக்கிறது. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சற்று யோசிக்க வைக்கிறது. 2026 ல் தான் தொகுதி நிர்ணயம் செய்து எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்ய உள்ளனர். அதற்கு பின் தான் மசோதா நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் பாகுபாடின்றி இந்த இடஒதுக்கீடு அமைய வேண்டும். எனவே பெண்கள் உரிமைக்காக ஒவ்வொருவரும் இடஒதுக்கீடு கிடைக்க முயற்சிக்க வேண்டும்.
................
பாரதியின் கனவு பலிக்கிறது
ஆ.ஆளீஸ்வரி, பேராசிரியை, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, முத்தனம்பட்டி :
2010ல் இது போன்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 பொது தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றிய போதும் மக்களவையில் நிறைவேற்றாததால் சட்டமாக்க முடியவில்லை. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்திற்கு சில கட்சிகளின் எதிர்ப்பு தடையாக இருந்தது. 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சி நடந்துள்ளது. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கனவு பலிப்பதற்கான முன்னோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.
.................
மகிழ்ச்சியாக உள்ளது
சக்தி ஜோதி, எழுத்தாளர் அய்யம்பாளையம்:பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் மகிழ்ச்சியாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதை போல் அனைத்து துறைகளிலும் 50 தசவீதம் இட ஒதுக்கீடு கிடைத்தால் தான் சம உரிமை கிடைக்கும். பெண்கள் தலைமை பதவிகளுக்கு அதிகமாக வரும் இக்காலத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது குறைந்த அளவு தான். 50 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் நிறைவேற்ற வேண்டும். மேலும் தலைமை பதவிகளில் பெண்கள் அமர்த்தபட்டாலும் அவர்களது வீட்டில் இருக்கும் ஆண் உறவுகளே பதவிக்கான வேலையை செய்கின்றனர். இது முற்றிலுமாக மாற வேண்டும். பெண்களும் தங்கள் வீட்டு ஆண்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வரவேண்டாம் என கூறும் தலைமைப் பண்பிற்கு உயர வேண்டும். அந்த நிலை உருவாக வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!