ADVERTISEMENT
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று ஒரு வாழைத்தார் நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கலியாந்துார் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் அதிகமாக ஒட்டு வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு ஆயிரம் கன்று வரை நடவு செய்து ஒரு ஆண்டு வரை பராமரித்த பின் விளைச்சலுக்கு வரும், வாழையில் அதன் காய், இலை, பூ, மரம் உள்ளிட்ட அனைத்துமே விற்பனை செய்யப்படும் என்பதால் விவசாயிகள் பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே வாழை பயிரிடுவது வழக்கம்.
ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து போதிய மழையின்மை, நோய் தாக்குதல், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து விற்பனை செய்யும் போது போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஒட்டு வாழை காய்களை பெரும்பாலும் பஜ்ஜிக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள், கடந்த மாதம் வரை ஒரு வாழைத்தார் ( அறுபது காய் ) 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் முடிந்து விட்டதால் வாழைத்தாரின் விலை பெருமளவு சரிந்து விட்டது. ஒரு வாழைத்தார் நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பாச்சேத்தி விவசாயிகள் கூறுகையில்: மொத்த விலை கடையில் வேறு வழியின்றி ஒரு தார் நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டோம், திருப்பாச்சேத்தியில் இருந்து கொண்டு வர வேன் வாடகைக்கு கூட கட்டவில்லை.
வேறு வழியில்லை, இன்னும் ஒருசில நாட்களில் வாழை காய்கள் பழுத்து விடும் அதன்பின் விற்பனை செய்ய முடியாது என்பதால் வேறு வழியின்றி அறுவடை செய்து விட்டோம் என புலம்பினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!