ADVERTISEMENT
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி , ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா சார்பில் 6 இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் ஹிந்து தர்ம சக்தி, அர்ஜூன் சேனா அமைப்பினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம் மாநகராட்சி ரோடு, கடைவீதி வழியாக கோட்டை குளம் கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் பாதுகாப்போடு சிலைகள் கரைக்கப்பட்டன.
வடமதுரை: ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா,பொதுமக்கள் சார்பில் வடமதுரை, மோர்பட்டி, ரெட்டியபட்டி உட்பட பல ஊர்களில் நேற்றுமுன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் 20 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வடமதுரைக்கு தும்மலக்குண்டு ரோட்டிலுள்ள நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ், சிவசேனா மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, மாவட்ட அமைப்பாளர் பாலாஜி , சஷ்டி சேனா ஹிந்து மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவி சரஸ்வதி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
மாநில இணை செயலாளர் ராஜேஷ் துவக்கி வைத்தார். வெங்கடாஸ்திரி கோட்டை, மேலக்கோவில்பட்டி, கணவாய்ப்பட்டி, தும்மலப்பட்டி, பழைய வத்தலக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 35 சிலைகள் ஊர்வலமாக வந்தன.
திண்டுக்கல் ரோடு, காந்திநகர், பிலீஸ்புரம், கடைவீதி, மெயின் ரோடு வழியாக கொட்டும் மழையிலும் கண்ணாபட்டி ஆற்றில் கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட்டன. டி.எஸ்.பி., முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
ஒட்டன்சத்திரம் : ஹிந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடைய கோட்டை பகுதிகளில் 50க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இவை அனைத்தும் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை ஊர்வலம் துவங்கியது. ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் பேசினார்.
மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பார்த்தீபராஜன், நகரத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய துணைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தனர். பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை, மேற்கு ஒன்றிய தலைவர் ரகுபதி, நகரத் தலைவர் சிவா ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
செக்போஸ்டில் துவங்கிய ஊர்வலம் பழநி ரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி. நகர் வழியாக சென்று விருப்பாச்சி தலையூற்று பகுதிக்குச் சென்றது. அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.
கன்னிவாடி: கன்னிவாடி, அச்சம்பட்டி ஆலத்துாரான் பட்டி, டி.புதுப்பட்டி, மணியக்காரன்பட்டி, கரிசல்பட்டி, தர்மத்துப்பட்டி, குய்யவநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. நேற்று கன்னிவாடிக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் துவங்கியது. ஆலத்துாரான்பட்டி மச்சக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது.
சின்னாளபட்டி: சிவசேனா சார்பில் சின்னாளபட்டியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் சின்னாளப்பட்டிக்கு கொண்டுவரப் பட்டன. மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். சீவல்சரகு கண்மாயில் சிலைகள் கரைக்கப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!