ADVERTISEMENT
தேனி, : லோக்சபா, சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் இது சட்டமாகும். பல ஆண்டுகளாக, பல்வேறு ஆட்சிகளின் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுவதும், பின்னர் சில கட்சிகள் எதிர்ப்பதும், மீண்டும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இடம்பெறுவதும் வாடிக்கையாக இருந்தது. இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லாததால், அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து தொகுதிகளை ஒதுக்குவது இல்லை. இதனால் சராசரியாக, அதிகபட்சமாக 12 சதவீதம் வரை தான் பெண்கள் எம்.பி.,க்களாகவும், எம்.எல்.ஏ.,க்களாகவும் இருந்துள்ளனர். இந்த நிலை இனி மாறும். பிரதமர் மோடி முழுமுயற்சியாக களம் இறங்கி 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து விட்டார். இதனால் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
இனி ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் குரல் ஒலிக்கும். அதிகாரத்தின் உச்சியில் பெண்கள் ‛கொடி பறக்கும்'. ‛வல்லரசு இந்தியாவின்' பலத்தில் பாதி பெண் சக்தியாகவே இருக்கும்.
இதுபற்றி பெண்கள் கூறுவது என்ன..?
தேசிய மகளிர் மேம்பாட்டு
தினமாக கொண்டாடலாம்
சரண்யா, துணை முதல்வர், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, தேனி
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோத நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. குடும்பத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பதில் பெண்கள் வல்லவர்கள். குடும்பத்தை சரியான பாதையில் வழிநடத்தி செல்லும் பெண்கள் நாட்டையும், உலகையும் சரியான பாதையில் வழிநடத்தி செல்வார்கள். இந்த மசோவால் அரசியல், சமூகத்தில் பெண்களின் நிலை உயரும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பெண்களின் நிலை மேம்படும். மசோதா தாக்கல் செய்த நாளை தேசிய மகளிர் மேம்பாடு தினமாக கொண்டாடலாம்.
நீண்டகால கனவு நிறைவேறியது
ஜி. சுகன்யா, இணை செயலர், நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி, கம்பம் :
'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்ற காலம் மறைந்து ராணுவம், விண்வெளி, விமானம் ஆகிய துறைகளில் சாதிக்கின்றனர். ஆனாலும் லோக்சபா, சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. பல பெண் அறிஞர்கள், சமூகசிந்தனையாளர்கள் அழுத்தம் கொடுத்த போதும் சட்டம் இயற்றவில்லை. தற்போது புதிய லோக்சபா கட்டடத்தில் இச் சட்டமியற்றியிருப்பது வரவேற்க தக்கது. இது வரலாற்று சிறப்புமிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. பெண் குலத்தின் நீண்டநாள் கனவு நிறைவேறி உள்ளது. சட்டம் இயற்றும் லோக்சபா, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்களாகவும், ஆன்மிகவாதிகளா சமுதாயத்திற்கு நல்லது செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. விவாதமின்றி சட்டத்தை இயற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாடு முன்னேற்றம் அடையும்
டாக்டர் காஞ்சனா, கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:
குடும்பம் முன்னேற்றம் காண்பதில் முக்கிய பங்கு வகிப்பது குடும்பத் தலைவி. அதே போல் எம்.எல்.ஏ., எம்.பி., என பெண்கள் அதிகமாகும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதற்காக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு பல்வேறு முன்னுரிமைகளை கொடுத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நாட்டுக்காக உழைப்பதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தொழில் துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் நிலையில் தற்போதய மசோதா தாக்கலால் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன்.
நம்பிக்கை தந்த மசோதா
-- டாக்டர் டி.பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், அரசு மாவட்ட மருத்துவமனை, பெரியகுளம்.
நேற்று புதிய பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் மோடி லோக்சபா, சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தார். மகாகவி பாரதி கண்ட புதுமைப் பெண்களாக, பெண்கள் அனைவருக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறேன். குறிப்பாக அரசியலில் மக்கள் பணியில், சமூக சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த மசோதா நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 'எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துள்ளது என பெண்கள் எண்ணாமல்', நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தினை பிரதிபலன் எதிர்பாராமல் மக்கள் பணியில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு, இவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நூற்றுக்கு நூறு சரிதான் என அனைத்து தரப்பினரும் பாராட்டும் விதமாக நடக்க நாம் தயாராக வேண்டும்.
-
--
இந்திய அரசியலில் வளர்ச்சிக்கான வழி
கே.சாந்தி, லட்சுமிபுரம், ஆண்டிபட்டி:
விவசாயம் செய்யும் ஆர்வத்தால் நர்ஸ் வேலையை விட்டு விட்டு தாயாருடன் விவசாயம் செய்கிறேன். சட்டசபை, பார்லிமென்டில் இட ஒதுக்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக பேசினர். தற்போது மசோதா தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசியலில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா, நிர்மலா சீதாராமன், கனிமொழி உட்பட பலர் அரசியலில் சாதனை படைத்துள்ளனர். பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்கள் அரசியலிலும் சாதிக்க 33 சதவீத இட ஒதுக்கீடு அவசியம் தேவை தான். இட ஒதுக்கீடு மூலம் அரசியலில், அரசு நிர்வாகத்தில் இடம் கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு உருவாக்கித்தர வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, வரும் காலங்களில் இந்திய அரசியலில் வளர்ச்சிக்கான வழிகளாக இருக்க வேண்டும்.
அனைத்து துறைகளிலும் நிறைவேற்றனும்
ஜி.மங்கை, நூலகர் - சி.பி.ஏ., கல்லூரி போடி : பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் 33 சதவீதம் இட ஒதிக்கீடு வழங்க பார்லியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது வரவேற்க தக்கதாகும். பெண்கள் எடுக்கும் முடிவுகள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் இருக்கும். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது லோக்சபா, சட்டசபை மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் நிறைவேற்ற வேண்டும். இதனை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைய தொடங்கும். வீடும் சரி நாடும் மிகப் பெரிய வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் அடையும். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது பேச்சு அளவில் இருக்காமல் நடைமுறைக்கு கொண்டு வரவும், முடிவு எடுப்பதிலும் முக்கியத்துவம் தரும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!