ADVERTISEMENT
மேலுார் : கேசம்பட்டியில் மறுகால் வசதி இல்லாததால், குளத்தில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர்.
கேசம்பட்டி ஊராட்சியில் செட்டியம்பலம் குளம் 11 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளம் மழைநீர் மற்றும் அழகர்கோயில் மலையில் இருந்து வரும் தண்ணீரால் நிரம்பும். அதன் மூலம் 4 கண்மாய்கள் மற்றும் ஏராளமான ஏக்கர் பயன் பெறும்.
இக் குளத்தில் 2019 ல் மராமத்து பார்த்த போது மறுகால் (தண்ணீர் வெளியேறும் பகுதி) கட்டவில்லை. அதனால் பருவமழையின் போது குளம் நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. பலமுறை புகார் செய்தும் கரையின் உடைப்பை இதுவரை சரி செய்யவில்லை என்பது விவசாயிகளின் குற்றச் சாட்டு.
சமூக ஆர்வலர் ஜீவா கூறியதாவது: மறுகால் கட்ட சொல்லி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கரை உடைந்து தன்ணீர் வீணாக வெளியேறுவதால் தண்ணீரை சேமிக்க முடியாமல் சாகுபடியின்றி நிலம் தரிசாகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இப் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் பாதித்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பருவமழை துவங்க உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மறுகால் கட்ட வேண்டும், என்றார்.
ஊராட்சி செயலர் சேகர் கூறுகையில், மறுகால்கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் கட்டப்படும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!