ADVERTISEMENT
திண்டுக்கல், செப்.20- திண்டுக்கல் மாவட்டத்தில் வலம் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் நடுவே ஒளி சிதைவைகட்டுப்படுத்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்ட ப்படாததால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூச செய்து விபத்தை உருவாக்கும் அவலம் அதிகரித்துள்ளது.இதிலும் சில வாகனங்களில் விதியை மீறி பவர் முகப்பு விளக்குகளும் பொருத்த இதுவும் விபத்துகளுக்கு இடம் கொடுக்கிறது .
மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளின் நடுவே கருப்பு ஸ்டிக்கர்கள் இருந்தால்தான் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒளி சிதைவு ஏற்படாமல் விபத்து அபாயம் தவிர்க்கப்படும். தற்போது சில வாகனங்களின் முகப்பு விளக்குகள் அதிக வாட்ஸ் கொண்ட எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. விதிகளை மீறி
வாகனங்களில் முகப்பில் பொருத்தப்படும் விளக்குகளால் எதிரே வரும் வாகனங்கள் நிலை தடுமாறுவதோடு, வாகன ஓட்டிகளின் கண்கள் கூச செய்து விபத்துக்கும் வழிவகுக்கிறது. பழைய வண்டிகளிலே பலர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மேலும் முகப்பு விளக்குகளை வண்டியின் அலங்காரமாய் கருதி மாட்டி கொள்கின்றனர். கட்டுப்பாடின்றி வாகனங்களில் மாட்டியுள்ள இதுபோன்ற விளக்குகளின் நடுவே கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரையே காண முடிவதில்லை. இதன் காண்காணிப்பும் எங்கும் இல்லை . இதை முறைப் படுத்த போலீசார் , வட்டார போக்குவரத்து துறை முன் வர வேண்டும் . ........
தொண்டு நிறுவனங்கள் முன்வரலாம்
வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கட்டுப்பாடின்றி மாட்டப்பட்டுள்ள விளக்குகளால் ஏற்படும் ஒளி வெள்ளமானது நான்கு வழிச்சாலை பயணம் செய்பவர்களுக்குத்தான் அதிக பாதிப்பாக அமைகிறது. ஏற்கனவே ரோடு வசதி சரியில்லாமல் இருக்கும் பல பகுதிகளில் பயணிக்கும்போது எதிரே வரும் வாகன ஒளி வெள்ளத்தால் கண்கள் கூசி வழியில் உள்ள பள்ளங்களை
கவனிக்க முடியாமல் கவன சிதைவு ஏற்படுகிறது. பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகன முகப்பு விளக்குகளின் ஒளி வெள்ளமே காரணமாக அமைகிறது. தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை முன்னெடுத்து செய்தால் விபத்து பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. போக்குவரத்து போலீசாரும் முகப்பு விளக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷியாம்குமார் ராமலிங்கம், கல்லுாரி மாணவர், திண்டுக்கல்.
...........
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!