ADVERTISEMENT
''தி.மு.க., அணி நிர்வாகிகள் கூட்டத்தையே, எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிச்சிட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த மாவட்டத்துல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''வடசென்னை மாவட்ட தி.மு.க., அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாவட்டச் செயலர் இளைய அருணா தலைமையில, ராயபுரத்துல நடந்துச்சு... இதுல, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினாரு பா...
''இந்தக் கூட்டத்தை, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ., - ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் - எம்.எல்.ஏ., எபினேசர் எல்லாம் புறக்கணிச்சிட்டாங்க... ஏன்னா, அணிகளின் நிர்வாகிகள் நியமனத்துல, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள்னு யார் பரிந்துரையையும், மாவட்டச் செயலர் இளைய அருணா ஏத்துக்கலை பா...
''தனக்கு வேண்டியவங்க, சலாம் போடுறவங்களுக்கு மட்டுமே பதவி குடுத்திருக்காரு... கட்சிக்கு உழைச்சவங்களை கண்டுக்காத கோபத்துல தான், பலரும் புறக்கணிச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''என்கிட்டயும் ஒரு தி.மு.க., நிர்வாகி தகவல் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் சமீபத்துல வந்துச்சே... சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்னாடி இருந்த அவரது சிலைக்கு, அமைச்சர் உதயநிதி மாலை அணிவிக்க வந்தாருங்க...
''அதுக்கு முன்னாடி, அங்கு கூடியிருந்த கட்சியினரை எல்லாம், 'அங்க நிற்காதே, இங்க நிற்காதே'ன்னு சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர், 'சின்ன அரசர்' மாதிரி மிரட்டி, உருட்டிட்டு இருந்தாருங்க...
''அதே நேரம், தனக்கு வேண்டிய நிர்வாகிகளை மட்டும், உதயநிதி வர்றப்ப, அவரது பார்வையில படுற மாதிரி நிற்க வச்சிருக்காருங்க... அதுவும் இல்லாம, உதயநிதியை வரவேற்று போஸ்டர் ஒட்டிய, கொடி, தோரணங்கள் கட்டிய கட்சியினரையும் மேடை பக்கமே நெருங்க விடாம, அடிக்காத குறையா விரட்டி விட்டுட்டாருங்க...
''இதனால, கடுப்பான பலரும், மாவட்ட நிர்வாகியை சகட்டுமேனிக்கு திட்டிட்டு, உதயநிதி வர்றதுக்கு முன்னாடியே வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ஓய்வு அதிகாரியை வச்சு, புகுந்து விளையாடறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்துல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, தற்காலிக பணிக்காக, 'ரிட்டயர்டு' ஆன அதிகாரி ஒருத்தரை நியமிச்சா...
''வசூல் விவகாரங்கள்ல கரை கண்டவருங்கறதால, இப்ப இருக்கற பெண் அதிகாரியின் எல்லா வசூல் பணிகளையும் இவர் தான் கவனிக்கறார் ஓய்... அதுவும் இல்லாம, பெண் அதிகாரியின் ஜீப் டிரைவர், தன் மனைவி பெயர்ல ஊரக வளர்ச்சி பணிகளை, பினாமியா டெண்டர் எடுத்து செய்றார்...
''டெண்டர் விண்ணப்பங்கள் பூர்த்தி பண்ற வேலைகளையும், 'ரிட்டையர்டு' அதிகாரி தான் பார்த்துக்கறார்... இதனால, இவரிடம் அலுவலக வேலைகள் எதையும் ஒப்படைக்கவே, மற்ற அதிகாரிகள் தயங்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அடடே, அன்பழகன் வாரும்... ஊருல சாந்தி, வீரமணி எல்லாம் சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
விரைவில் சின்னவருக்கு பட்டாபிசேகம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே...