தாலுகா தலைநகரான வேடசந்துாரிலிருந்து நேரடியாக சென்னை சென்று வர அரசு பஸ் வசதி எதுவும் இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு அரசு பஸ் சேவை துவக்கப்பட்டது. வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 9:10 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் திருச்சி வழியாக சென்னை சென்றது. இதேபோல் சென்னையில் இரவு 9:15 மணிக்கு புறப்படும் மற்றொரு அரசு பஸ் அதே வழித்தடத்தில் வேடசந்துார் நோக்கி வந்தது.
இதனால் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் மக்கள் எந்த சிரமம் இன்றி குறைந்த கட்டணத்தில் சென்று வந்தனர்.
இதேபோல் கல்லுாரி மாணவர்களும், சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களும், தொழில் புரிவோர் பயன் பெற்றனர்.
நல்ல முறையில் இயங்கிய இந்த பஸ் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
அதன் இது வரை இயக்கப்படாததால் இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பஸ்சில் ரூ.350 கொடுத்து சென்னை சென்ற மக்கள் தற்போது தனியார் பஸ்சில் ரூ. ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி சென்னை செல்லும் நிலை உள்ளது.
இதுவே பொங்கல், தீபாவளி உள்ளிட்ட சீசன் நேரங்களில் ரூ.1500 வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்கி பொதுமக்களின் நலன் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கூடுத ல் கட்ட ணத்தால் அவதி
கே.நேரு மாணிக்கம், நுகர்வோர் சங்க செயலாளர், வேடசந்துார்: சென்னை செல்லும் அரசு பஸ் இயங்காததால் பொதுமக்கள் கூடுதலான கட்டணங்களை செலுத்தி தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது.
வேடசந்துாரிலிருந்து குறைந்தது 7 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 1200 முதல் 1500 வரை வசூல் செய்யப்படுகிறது. சீசன் நேரங்களில் இன்னும் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு அரசு உண்மையிலேயே நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் நிறுத்தப்பட்ட இந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். பஸ்ஸ்டாண்டிலே டிக்கெட் புக்கிங் சென்டர் ஏற்படுத்தி பதிவு செய்யலாம். இதனால் சென்னை செல்லும் மாணவர்கள் என அனைவரும் பயன்பெறுவர்.
வருத்தம் அளிக்கிறது
வே.பழனியப்பன், தலைவர், மக்கள் நல மன்றம், வேடசந்துார்: வேடசந்துாரில் இருந்து நேரடியாக சென்னை சென்ற அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் தற்போது சென்னை செல்லும் மக்கள், திண்டுக்கல், கரூர் சென்று அதன் பிறகு சென்னை செல்கின்றனர்.
போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்திலும் கூட தாலுகா தலைநகரில் இருந்து நேரடியாக சென்னை செல்ல முடியவில்லை.
நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
அரசு பஸ்கள் லாபத்தில் இயங்கக்கூடிய வழித்தடங்களை கண்காணித்து மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் வேடசந்துார் சென்னை அரசு பஸ்சையும் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
அன்று வாரம் ஒரு முறை இன்று மாதம் ஒரு முறை
ஆர்.நாச்சிமுத்து, நிர்வாகி, பசி இல்லா வேடசந்துார்: வேடசந்துார் சென்னை செல்லும் அரசு பஸ் இயங்காததால் தற்போது தனியார் பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்பி உள்ளனர். இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் சென்று தங்கி இருப்பவர்கள், போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை, உள்ளது . இதை கருத்தில் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை , இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வரும் நிலையில் உள்ளனர்.
அரசு பஸ்சை மீண்டும் முறையாக இயக்கினால் வாரம் ஒரு முறையோ ,இரு வாரங்களுக்கு ஒரு முறையோ ஊருக்கு வந்து செல்வர். அரசு அலுவலகம் சம்பந்தமாக சென்னை செல்லும் மக்களும் பயன்பெறுவர்.
போக்குவரத்தில் மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை செய்து வரும் அரசு, வேடசந்துார் -சென்னை அரசு பஸ்சை மீண்டும் இயக்கினால் இப்பகுதி மக்கள் நலன் பெறுவர், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!