ADVERTISEMENT
மானாமதுரை,: மானாமதுரை சமத்துவபுரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பெண்கள் கும்மி பாட்டு பாடி குத்தாட்டமிட்டு மகிழ்ந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மானாமதுரை நகர் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர் மேலும் 11 இடங்களில் பா.ஜ.,மற்றும் ஹிந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக,ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து மாலை விநாயகர் சிலைகளை தெருக்களில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மானாமதுரை சமத்துவபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு அங்குள்ள மக்கள் சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் நேற்று காலை விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற போது அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மி பாட்டு பாடி குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் மேளதாளங்களுடன், ஊர்வலமாக தாயமங்கலம் ரோட்டிலுள்ள அலங்கார குளத்திற்கு கொண்டு சென்று கரைத்தனர்.
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
இக்கோயிலில் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. நேற்று காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கவுரிவிநாயகரை தரிசித்தனர். நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கவுரி விநாயகர் எழுந்தருளினார். ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில், கோயில் சிவாச்சாரியார் பசுபதி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!