கெஜ்ரிவால் கெத்து ஸ்டாலினுக்கு இல்லை: செல்லுார் ராஜூ பேச்சு
மதுரை : ''ஓட்டு போட்ட மக்களுக்காக பாடுபடும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கெத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை'' என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரையில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கருணாநிதி காலத்தில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கு இலவச 'டிவி' கொடுத்தார். ஆனால் கேபிள் இணைப்பிற்கு மாதம் ரூ.100 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் அத்தனை 'டிவி'க்களுக்கும் வசூல் செய்து விட்டார். இதுதான் விஞ்ஞான ரீதியான ஊழல்.
மது பாட்டிலுக்கு ரூ.10 வீதம் இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.30ஆயிரம் கோடி வரை தி.மு.க., வினர் சம்பாதித்துள்ளனர். இதைத்தான் நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் தனது நண்பரிடம் பகிர்ந்து கொண்டார். இந்த விஷயம் வெளியானதால் அவரை டம்மியாக்கிவிட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க வைத்துள்ளனர்.
டெல்டாக்காரன் என்ற சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின், காவிரி கூட்டத்தை புறக்கணித்து இருக்க வேண்டாமா. டில்லியின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திற்கு குரல் கொடுத்தால் மட்டுமே 'இண்டியா' கூட்டணியில் பங்கேற்பேன் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஓட்டுபோட்ட மக்களுக்காக கெஜ்ரிவால் பாடுபடுகிறார். ஆனால் தண்ணீர் தராத கர்நாடகாவில் நடந்த 3 கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தி.மு.க., ஒரு முறை ஆட்சி செய்த பின் மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. கருணாநிதி பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர். ஆனால் ஸ்டாலின் எழுதிக் கொடுத்ததை படிக்கும் பொம்மை முதல்வர்.
அண்ணாதுரையை பற்றி ஒருவர் இழிவாக பேசியபோது, கூட்டணியில் இருந்த நாங்களே எதிர்த்து குரல் கொடுக்கத்தோம், தி.மு.க., கொதித்து எழுந்திருக்க வேண்டாமா என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!