லேப்ராஸ்கோப்பி மூலம் மண்ணீரல் அகற்றி சாதனை தேனி மருத்துவக்கல்லுாரியில் நடந்தது
தேனி : தேனி மருத்துவக்கல்லுாரி மருத்தவமனையில் லேப்ராஸ்கோப்பி மூலம் வாலிபருக்கு டாக்டர்கள் மண்ணீரல் அகற்றினர். இம் மருத்துவமனையில் முதன் முறையாக மண்ணீரல் அகற்றப்பட்டது.
உத்தம பாளையத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆக., இறுதியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மருத்துவப்பரிசோதனையில் அவரது மண்ணீரலில் நாடாப்புழுவால் கட்டி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டது. மருத்துவக்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசுடன் ஆலோசனை யில் 'லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர்கள் முத்து, லட்சுமி நாராயணன் தலைமையில் டாக்டர் அசோக்குமார் குழுவினர் வாலிபரின் மண்ணீரலை 'லேப்ராஸ்கோப்பி' சிகிச்சை மூலம் அகற்றினர்.
இங்கு 'லேப்ராஸ்கோப்பி' சிகிச்சை மூலம் மண்ணீரல் அகற்றப்படுவது முதல்முறையாகும். மருத்துவ கண்காணிப்பில் இருந்த வாலிபர் நேற்று வீடு திரும்பினார். அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த செல்கள் உருவாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
டாக்டர்கள் கூறுகையில், மண்ணீரல் உடலில் ரத்த செல்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உறுப்பாகும். நாய் வயிற்றில் வளரும் நாடாப்புழுக்கள் மனிதர்களின் நுரையீரல், கல்லீரல், குடல் பகுதியினை அதிகம் தாக்கும். மண்ணீரலை பாதிப்பை ஏற்படுத்துவது அரிதானது.
நாடாப்புழுக்களின் முட்டை நாய்கழிவுகள் மூலம் பொது வெளியில் பரவுகிறது. குழந்தைகள் மண்ணில் விளையாடிவிட்டு கை சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது பாதிப்பு வரும், காய்கறிகளை சுத்தம் செய்து உண்ண வேண்டும். தொடர் வயிற்று வலி, வாந்தி இருமல் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆப்ரேஷன் தனியார் மருத்துவமனைகளில் செய்து இருந்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். மூன்று வயதுக்கு மேற்பட்டோர் மண்ணீரல் இல்லாமல் சிகிச்சையுடன் வாழலாம் என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!