லோக்சபா மற்றும் சட்ட சபையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கு நாடு முழுதும் பெண்களிடம் குறிப்பாக, தமிழகத்திலுள்ள பெண்கள் மத்தியில், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏனெனில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது.
தமிழகம் முன்னோடி
ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே, அதாவது 1920ம் ஆண்டிலேயே, இந்தியாவின் முதல் சட்டசபை உறுப்பினராக முத்துலெட்சுமி ரெட்டி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில்தான் ஜெயலலிதா, ஜானகி என இரண்டு பெண்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். தமிழக உள்ளாட்சிகளில் இப்போது பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
சில உள்ளாட்சிகளில், பெண் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 50 சதவீதத்துக்கும் அதிகமாகஉள்ளது. பெண் மேயரைக் கொண்ட கோவை மாநகராட்சியில், மொத்தமுள்ள, 100 கவுன்சிலர்களில், 55 பேர் பெண்கள்.
மேயரைத் தவிர்த்து, கோவையிலுள்ள ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களின் தலைவராகவும் பெண்கள் உள்ளனர்.
இப்படி அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் பெண்களுக்கான பங்களிப்பு, அதிகமாகவே உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்ட பின், தமிழகத்தில் எவ்வளவு பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது, 234 சட்டசபை தொகுதிகளும், 39 லோக்சபா தொகுதிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இவற்றில் முறையே, 77 மற்றும் 13 என்ற எண்ணிக்கையில், பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
ஆனால், 33 சதவீதம் ஒதுக்கீடு என்பதைக் கணக்கிடும்போது, இதை விடக் கூடுதல் எண்ணிக்கையிலேயே, பெண்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சி
உதாரணமாக, கோவையில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், 33 சதவீத ஒதுக்கீடு என்று கணக்கிடும்போது, நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது இங்கு ஒரு பெண் எம்.எல்.ஏ., மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் மூன்று பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று, தற்போது இங்குள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில், ஒரு தொகுதி கூட பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
இனிவரும் நாட்களில், ஒரு தொகுதி கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்பதால், அதிலும் ஒரு பெண் எம்.பி., உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில், அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதில், மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியுமென எனக்கூறி உயர் நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்தது. பல ஆண்டுகளுக்குப் பின், இப்போது மகளிர் மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.அதேபோல், தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு, 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு -26 இன் கீழ், கடந்த 2016ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர் கருத்து (5)
பின்னால் இருந்து கணவன், தந்தை, மகன் என்று யாராவது ஒரு ஆடவர் அதிகாரம் செய்யும் அவலம் ஏற்படும். சென்னை மேயர் இதற்கு சிறந்த உதாரணம்
ஈரோடு ராமசாமி நாயக்கன் கண்ட கனவு என்று உருட்ட வாய்ப்புக்கள் அதிகம். அதுபோக மத்தியரசுக்கு ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் வெளிப்பாடு என டிவி விவாதங்கள் வைக்கவும் சான்ஸ் இருக்கிறது.
பெண்கள் அரசியலில் வருவது பாராட்ட வேண்டியதுதான். ஆனால் அவர்களுடைய கணவன்மார் தான் இங்கே ஆட்சி செய்கிறார்கள்.
புராக்சி முறையில் மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களின் கணவர்கள் ஆட்சி நடத்துவது போல புராக்சி முறையில் எம்பி எம்எல்ஏ க்களை உருவாக்காமல் இருக்க வேண்டும்.
எருமை வாங்கும் முன்பு தயிர் விலை பேசாதே என்பார்கள். இந்த மசோதா இப்போது தான் தாக்கலாகி உள்ளது. 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 2029ல் தான் அமலுக்கு வருமாம். அதற்குள் என்னென்ன மாற்றங்கள் வருமோ? அதற்காக இப்போதே ஆள் ஆளுக்கு உரிமை கொண்டாடுவது ஏன்? இதெல்லாம் தேர்தல் ஜூம்லா தான் என்பது கண்கூடாக தெரிகிறதே...