Load Image
Advertisement

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்



புதுடில்லி ''லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்படும், 'பெண் சக்தியை வணங்கும் சட்டம்' எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது, நம் ஜனநாயகத்தை மேலும் வலுவாக்கும். எனவே, இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நேற்றைய கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்னதாக, பழைய பார்லிமென்ட் வளாகத்துக்கு விடை கொடுக்கும் நிகழ்வு, மைய மண்டபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புதிய பார்லிமென்ட் வளாகத்துக்கு நாம் செல்வது, புதிய எதிர்காலத்துக்கான புதிய துவக்கம். இங்கு நம் செயல்பாட்டின் வாயிலாக, 2047ல், நம் நாட்டை வளர்ந்த நாடாக நாம் உருவாக்க வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

இன்று, புதிய பார்லிமென்ட் வளாகத்துக்கு நகர்கிறோம். நாம் அனைவரும் ஒரு புதிய எதிர்காலத்தை துவக்கப் போகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின், பிரதமர் மோடி தலைமையில் புதிய பார்லிமென்ட் வளாகம் நோக்கி அனைத்து எம்.பி.,க்களும் நடந்து வந்தனர். இந்திய பார்லிமென்ட் இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய பார்லி.,யில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டம் நேற்று துவங்கியது.

இரு சபைகளின் முதல் கூட்டத்திலும், பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண் சக்தியை வணங்கும் சட்டம் எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நம் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். இந்த நேரத்தில், நம் நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மசோதாவை சட்டமாக இயற்ற நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை குழு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்கை அதிகரிப்பதன் வாயிலாக, தேசத்திற்கான அவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முடியும்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானத்தை முன்னோக்கி எடுத்து செல்ல, மிகப்பெரிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை இந்த அரசு முன்வைக்க உள்ளது.

இந்த சட்டத்திருத்தம் ஒருமித்த கருத்துடன் சட்டமாக மாறினால், அதன் சக்தி பன்மடங்கு பெருகும் என, உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். எனவே, இரு சபைகளிலும் இந்த மசோதா முழுமனதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும், அவர்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கும், இதுபோன்ற பல உன்னதப் பணிகளுக்கும், கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப் படும்.

உறுப்பினர்கள் அனைவரும் பழைய கசப்புகளை மறந்துவிட்டு புதிய அத்தியாயத்தை துவங்க வேண்டும். இந்த சபை, ஒட்டு மொத்த தேசத்தின் வளர்ச்சிக்கானதே அன்றி, எந்த அரசியல் கட்சிகளின் நலனுக்காக அல்ல.

நாட்டின், 140 கோடி மக்களின் கனவுகளை இந்த சபை பிரதிபலிக்கிறது. இங்கு புதிய சகாப்தத்தை துவங்கும் போது பழைய கசப்புகளை நாம் மறந்தாக வேண்டும்.

புதிய பார்லிமென்ட் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல், நாட்டின் முதல் பிரதமரான நேருவின் கரம் பட்டது; இது வரலாற்றுடன் நிகழ்காலத்தை இணைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் நிர்ணய சபை!

பழைய பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசும்போது, ''இன்று நாம் புதிய கட்டடத்துக்கு இடம் மாறுகிறோம். அதனால், பழைய கட்டடத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது. எனவே, இந்த கட்டடத்தை இனி பழைய பார்லிமென்ட் என அழைப்பதற்கு பதில், 'அரசியல் நிர்ணய சபை' என, அழைக்க வேண்டும்,'' என, பிரதமர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, பழைய பார்லிமென்ட் கட்டடம் இனி, 'அரசியல் நிர்ணய சபை' என அழைக்கப்படும் என்பதை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி செய்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement