கட்டுரையாளர், பொறியியல் பட்டதாரி.
திருப்பூர், சென்னையில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர். 'ஹார்ட்புல்னெஸ்'
அமைப்பின் தமிழகம், புதுவை, கேரள மாநில மண்டல பொறுப்பாளர். தனது குருவைப் பற்றி இவர் எழுதிய 'ஹி த வொண்டர்' என்ற ஆங்கிலநுால், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மனதைக் கட்டுப்படுத்தினால் உலகத்தை எளிதில் வெற்றி கொள்ள முடியும். அதற்கான எளிய வழிமுறைதான் தியானம். தியானம் மூலம் உள்ளத்தையும், உடலையும் ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தில் கொண்டு செல்ல முடியும்.
தியானம் என்பதற்கான எளிமையான வரையறை: 'ஒரு விஷயத்தைப் பற்றி குறிப்பிட்ட நேரத்துக்கு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சிந்திப்பது' என்பதுதான். இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆன்மிகத்தில், 'நமது அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படையாக விளங்குகிற, நம் உள் உலகின் ஆழத்தில் மெல்லிய அதிர்வு நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தெய்வீக ஆற்றலின் மீது நாம் தியானம் செய்கிறோம்' என்று சொல்லப்படுகிறது.
இன்றைய நவீன உலகில் மனித குலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை, தனி மனிதர்கள் மற்றும் மனித குழுக்களிடையே நிகழும் நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் தான். வசிப்பிடம், குடும்பம், வேலை செய்யும் இடம், பொது தளங்கள் என அனைத்து இடங்களிலும், அனைத்து வயதினரிடையேயும், உலகில் உள்ள எல்லா பகுதிகளிலும் இந்தப் பிரச்னை விரிந்து பரவி காணப்படுகிறது. இது சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது.
மனித குலத்தைப் பாதிக்கும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமான மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு இந்த 'சமூக அமைதியின்மையே' அடித்தளம் என்றால், அது மிகையில்லை.
தியானம், நம்மை நம் உள் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறது; அங்கு படைப்பின் யதார்த்தத்தைப் பற்றிய வெளிப்பாடுகளைப் பெற்று, நாம் அனைவரும் அன்பால் 'ஒற்றை அலகாக' இணைந்திருப்பதை உணர்கிறோம்.தியானம் மூலம் இந்த ஆழங்களின் அமைதியைத் தொடும் போது, நமக்கு இடையே நிலவுகிற முரண்கள் அகல்கின்றன.
இது தனி நபர்களாகிய நம் அனைவருக்குள்ளும் அமைதியையும், ஆனந்தத்தையும் உருவாக்குகிறது. பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து, உள்ளத்தில் அன்பையும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஊற்றெடுக்கச் செய்வது தியான செயல்முறையின் ஒட்டுமொத்த விளைவாகும்.
தியானம் எளிது
தியானம் என்பது மிகப் பெரிய, சிரமமான, செய்ய முடியாத காரியமோ இல்லை. நம் அன்றாட வீட்டு வேலை, அலுவலகத்தில் செய்யும் பணி போல் அதுவும் ஒரு செயல்பாடு தான்.
இதற்கு முழுமையாக நம் மனமும், உடலும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். அவ்வளவு தான், இதில் மறைந்துள்ள ரகசியம்.
எளிமையாக தியானம் செய்வது எப்படி எனில், ஓரிடத்தில், வசதியாக அமர்ந்து கொண்டு, உடலை தளர்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். முதல் சில அமர்வுகளுக்கு ஒரு பயிற்சியாளர் மூலம் நாம் வழிகாட்டுதல் பெறலாம்.
உங்கள் இதயம் மீது கவனத்தை திருப்பி, அங்கு காணும் தெய்வீக அதிர்வு (தெய்வீக ஒளி) குறித்து தொடர்ந்து சிந்திக்க துவங்குங்கள். இது தான் தியானத்தின் முதல் கட்டம். இதே நிலையில் தொடர்ந்து இருங்கள். படிப்படியான தொடர் பயிற்சி மேற்கொள்ளும் போதும் நமது சிந்தனையை உணர்வாகவும் அதற்கு அப்பாலும் மாற்றும். அதாவது தெய்வீக அதிர்வுகளையும் தெய்வீகத்தின் இருப்பையும் நாம் விரைவில் உணரத் துவங்குவோம்.
தியானத்தின் பலன்கள்
தினந்தோறும் எளிதான தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாம் பெரிய பலன்களைப் பெறலாம்.
* ஆழ்ந்த தளர்வு நிலையை உருவாக்குகிறது
* மனதை அமைதிப்படுத்துகிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
*ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
* மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது
* செரிமான பிரச்னைகளை சீராக்குகிறது
* கருவுறுதலை மேம்படுத்துகிறது
* முதுமையை தாமதப்படுத்துகிறது
* மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது
இதுபோன்ற பலன்களை வேறு எந்த விதத்தில் எளிதாகப் பெறமுடியும் என சிந்தித்துப் பார்த்தால் விடை என்னவோ பூஜ்யம்தான்.
இதயத்தில் தெய்வீக அதிர்வு
ஏனெனில் இது போல் ஏதாவது ஒரு பிரச்னை ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. இதற்கு எவ்வளவோ பொருளாதார ரீதியாக செலவிட்டும், நேரத்தை விரயப்படுத்தியும், மேலும் துன்பங்களை வாங்கிக் கொள்கின்றனர். எளிதான முறையில் தியானம் மூலம் இதற்கான தீர்வை அடையலாம்.
இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு தியானப் பயிற்சி மிக அவசியம் என்பதை உணர்ந்த மக்கள், அதற்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
'தேவை எழுந்தால் அதற்கான வழங்குதலும் அதிகரிக்கும்' என்ற நியதிப்படி, தியானப் பயிற்சி தரும் விதமாக பல்வேறு அமைப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றின் நோக்கம் என்பது ஒன்று என இருந்தாலும், அவை வெவ்வேறு விதமான செயல் முறைகளைக் கொண்டுள்ளன. இதில் நாம் நமக்கு பொருத்தமான மற்றும் வசதியான அமைப்பை, மையத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற, அனைத்து தரப்பினரும் பின்பற்றக் கூடிய ஒரு எளிய தியானப் பயிற்சி உள்ளது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக நான் இந்த பயிற்சி முறையை பின்பற்றி வருகிறேன்.
அதன் சிறப்பியல்புகள் என்னவென்றால், இந்த முறையில் நீங்கள் தியானம் செய்யும் போது, 'பிராணாஹுதி' எனும் தெய்வீக அதிர்வு ஒரு சிறந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் இதயத்திற்குள் பாய்கிறது. இது உங்கள் தியானத்தை மிக எளிதாக சீரமைக்க உதவுகிறது. இது அறிவியல் அடிப்படையிலான தனித்துவமான செயல்முறை ஆகும்.
பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், தொழில் முனைவோர் என பல தரப்பினரும் பல்வேறு வித மன அழுத்தம், சோர்வு என ஏற்பட்டு துன்பத்தில் உள்ளனர்.
நாம் என்னதான் அதிக கல்வி பெற்றிருந்தாலும், அதிக ஊதியம் பெறும் வேலையில் இருந்தாலும், கோடிக்கணக்கில் வருவாய் தரும் தொழில் செய்தாலும், பல்வேறு அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தாலும் தனி மனிதனாக மன அமைதி பெற்றிருக்க வேண்டும் என்பது மிக அவசியம். அந்த அமைதியைத் தரக்கூடியது தான் தியானம்.
வெற்றி நிச்சயம்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இது போன்ற பயிற்சிகளில் இருந்தோர் எண்ணிக்கை, உலகம் முழுவதும் பல கோடி பேராக அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் முற்றிலும் அறிவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தியானப் பயிற்சிகள் முழுமையாக பலன் அளித்தது என்பது தான். இதுபோன்ற பல செயல் முறைகளை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
ஒரு ஜவுளிக் கடை அல்லது பேரங்காடிக்கு சென்று உங்களுக்கு பொருத்தமான சட்டையை தேர்வு செய்ய முயற்சிப்பது போல; கார் விற்பனையகத்திற்கு சென்று காரை ஓட்டிப் பார்த்து தேர்வு செய்வது போல, உங்களுக்கு ஏற்ற தியானப் பயிற்சி முறை எது என்பதை கண்டறிய, உடனடியாக அதைச் சோதித்துப் பாருங்கள்.
உங்களுக்கு ஏதுவான ஒரு முறையை தேர்வு செய்து, அதை முறைப்படி பின்பற்றுங்கள். உங்கள் மனதில் அமைதியும், சாந்தியும் ஏற்படும். தனி மனித அமைதி, ஒழுக்கம் போன்றவை தான், சிறு துளிகளாக சேர்ந்து பெரு வெள்ளமாக ஊர் முழுவதும், நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவி நன்மை தரும். உள்ளம் அமைதி பெறுவதோடு, உலகம் நிம்மதி பெறும். பயிற்சி மூலம் முயற்சியுங்கள்; வெற்றி நிச்சயம்.
வாசகர் கருத்து (3)
These people make tall claims. Thats all. It helps very little in life.
இதெல்லாம் சாமியார் வாழ்க்கைக்கு ஒத்துவரும். இவரோட தெருவில் இருக்குறவங்களை குப்பையை தெருவில் போடாம சுத்தமா செஞ்சு காட்டச் சொல்லுங்க பாப்பம்.
எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. எடுத்துக்காட்டாக ஜலதோஷத்துக்கு மருந்து சாப்பிடுகிறோம் .திரும்ப வராதா என்ன? மருந்தும் தீர்வும் தற்கால நிவாரணம் மட்டும்தான் திரும்ப திரும்ப வரும்.