Load Image
Advertisement

நாங்கள் சாதித்தோம்! நீங்கள்?

 We made it! you?    நாங்கள் சாதித்தோம்!   நீங்கள்?
ADVERTISEMENT
சமந்தா அயனா

கட்டுரையாளர், சூழல் ஆர்வலர்.

நீலகிரி மாவட்டம், 'கிளீன் குன்னுார்' அமைப்பின் தலைவர். மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவும் 'கைன்டர்' அறக்கட்டளையின் அறங்காவலர். இந்திய கலை, கலாசார பாரம்பரிய
அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கிறார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின், 'கிரீன் வாரியர்' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.


நம் வீட்டை மட்டுமின்றி நம் தெருவை, நம் ஊரை, நம் நாட்டையே சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. சுற்றுச்சூழலின் எதிரியான நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பூமி என்பது இன்றளவும் கேள்வி குறியாக உள்ளது. மறுசுழற்சிக்கு விடைதேடி செல்வதில் நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதி முன்னோடியாக திகழ்கிறது.

கடந்த 2018 ம் ஆண்டில் தொழில்நுட்ப ஊழியர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் என, பலதரப்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கிய, 'கிளீன் குன்னுார்' அமைப்பு, மழைநீர் கால்வாய்களை துாய்மைபடுத்தியதுடன், 'கொரோனா' காலத்தில் அதன் தடுப்பு சுவரில் அழகிய இயற்கை ஓவியங்களை வரைந்து துாய்மை, நோய் தடுப்பின் அவசியம் குறித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டது.

மழையின்போது நீலகிரி மலையில் சேகரமாகும் நீர், பவானி ஆற்றை அடைகிறது. அது வரையுள்ள நீரோடை, சிற்றாறுகளில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசுபட்டது. யானை உள்ளிட்ட வன விலங்குகளே பருக முடியாத நிலையும் ஏற்பட்டது.

கழிவு மேலாண்மை



மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், 'கிளீன் குன்னுார்' சார்பில் நீரோடையை துார்வாரினோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவது பெருமளவில் குறைந்தது. எங்களின் சிறப்பான சேவையைக் கண்டு ராணுவத்தினரும் கைகோர்த்து வெலிங்டன் சுற்றுப்புற நீரோடை, சிற்றாறுகளை துாய்மை படுத்தினர். பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கில் அகற்றப்பட்டன.

குன்னுார் நகராட்சியில் சேகரித்த குப்பை, ஒட்டுப்பட்டறை குப்பை குழியில் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றம் வீசியது. சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் நோய் பாதிப்புக்குள்ளாகினர். தன்னார்வலர்கள் வாயிலாக அந்த இடத்தை துாய்மைப்படுத்தி, கழிவு மேலாண்மை பூங்காவாக மாற்றினோம்.

அங்குமேரிகோல்டு, ஆஸ்டர், பெட்டூனியா, பிளாக்ஸ், டயான்தஸ், பேன்சி போன்ற நாற்றுகளை வைத்தோம். வண்ண மலர்கள் பூத்து கண்களுக்கு விருந்து படைக்கின்றன. அப்பகுதி முழுவதும் மணம் வீசுகிறது. மேலும், ஒரு ஏக்கரில் செடிகள், கோரை புற்கள் நடவு செய்து பட்டாம்பூச்சி, தேனீக்கள் பூங்காவும் உருவாக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலம், அமிர்தரசில் இருந்து கொண்டு வரப்பட்ட, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 'பேலிங்' இயந்திரத்தின் மூலம், மட்காத பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வெப்ப அழுத்தம் கொடுத்து, 200 கிலோ வரை 'கம்ப்ரஸ்' கொடுக்கப்படுகிறது. பின், 'கம்ப்ரஸ் பிளாஸ்டிக்' மற்றும் கம்பி வலைகளை கொண்டு, கல் தடுப்பு சுவருக்கு பதில் 'பிளாஸ்டிக் கான்கிரீட் சுவர்' அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறைச்சிக்கழிவில் உரம்



தவிர, பிளாஸ்டிக் கழிவுகளில் காஸ், கார்பன் தயாரிக்கப்படுகிறது. நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளில், பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி துகள்கள், மட்கும் பொருட்களை தனித்தனியாக பிரிக்க 'ஸ்லோ கன்வேயர்' சல்லடை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மட்கும் குப்பைகளை உரமாக்குவது தமிழகத்தில் அனைத்து இடங்களில் இருந்தாலும், முதல் முறையாக இறைச்சி கழிவுகளை உரமாக்கும் முயற்சி வெற்றிகரமாக்கப்பட்டுள்ளது.

கோழி, மீன் கழிவுகள், நார் கழிவுகளை குறிப்பிட்ட வெப்பநிலையில், 'பல்வரைசர்' எனும் இயந்திரத்தில் அரைத்து உரமாக மாற்றப்படுகிறது. பிறகு, 'விண்ட் ரோ கம்போசிங்'முறையில் காற்று, வெளிச்சம் உள்ள இடத்தில் பதப்படுத்தப்படுகிறது. இவை, 30 நாட்களில் இங்குள்ள குளிரான காலநிலையிலும் உரமாக மாற்றப்படுகிறது.

இந்த உரம், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் 'பெர்டிலைசர் கன்ட்ரோல் ஆர்டர்' மதிப்பீட்டில் முதல் கிரேடும் பெற்றது. விவசாய தோட்டங்கள், மலர் சாகுபடிக்கு உரமாக பயன்படுத்த விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் இங்கு பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.

நாட்டில் முதல்முறையாக



கடந்த 2019 அக்டோபர் முதல் ஜூன் வரை 7.38 லட்சம் கிலோ பிளாஸ்டிக்; 4.16 லட்சம் கிலோ பேப்பர்; கார்ட்போர்டு கண்ணாடி 2.50 லட்சம் கிலோ; எலக்ட்ரானிக் இ--வேஸ்ட் 44 ஆயிரம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. குன்னுாரில், 40 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த திட்டம் ஆதாரமாக இருக்கிறது.

நாட்டிலேயே முதன்முறையாக, பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்ட நீலகிரியில் மேற்கொண்ட இந்த முயற்சியை, நமது மாநிலத்தின் பல்வேறு உள்ளாட்சிகளிலும் செயல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல மாவட்டங்களின் பிரதிநிதிகள் இங்கு வந்து பார்வையிட்டு, தங்களது ஊர்களிலும் இதே போன்று செயல்படுத்த விபரங்களை கேட்டு செல்கின்றனர்.

பிளாஸ்டிக் மறுசுழற்சியால் மலை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம், நாடு முழுவதும் பரவ வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை, குப்பைகளை வனத்திலும், பொது இடங்களிலும், வீதிகளிலும் துாக்கி எறிவதை தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தரம் பிரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கினால், அவற்றை அவர்கள் திறம்பட கையாள்வார்கள். பொதுத்துாய்மையும், சுற்றுச்சூழலும் மேம்படும். இது, அரசாங்கத்தின் பொறுப்பு என, நாம் ஒதுங்கிவிடாமல், ஒவ்வொரு குடிமகனின் கடமையாக கருத வேண்டும்.



வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement