தரும் தண்ணீரை ஒழுங்காக தாருங்கள்: துரைமுருகன் கெஞ்சல்
''காவிரியிலிருந்து, 5,000 கன அடி தண்ணீர் தருவதாக கூறினாலும், 3,000 அல்லது 3,500 கன அடியோ தண்ணீர்தான் வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. எனவே, வருகின்ற இந்த தண்ணீரையாவது ஒழுங்காக தருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்,'' என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நேற்று காலை, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ெஷகாவத்தை, தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார்.
வலியுறுத்தல்
மத்திய அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தம்பித்துரை - அ.தி.மு.க., திருமாவளவன் - வி.சி., ஜோதிமணி - காங்கிரஸ், வைகோ - ம.தி.மு.க., அன்புமணி ராமதாஸ் - பா.ம.க., உள்ளிட்ட தமிழ கத்தின் பல முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அனைத்து விபரங்களையும் தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்ேஸனா, மத்திய அமைச்சரிடம் விளக்கினார்.
இதன்பின், அனைத்துக் கட்சி குழுவின் சார்பில் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய காவிரி தண்ணீரை உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டு மென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
வழக்கமான ஆலோசனை தான் நடந்தது. கர்நாடகாவில் தண்ணீர் உள்ளது. ஆனாலும், அவர்களது அணைகளில் இருக்கும் தண்ணீரை காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்காமல் தர மறுக்கின்றனர். 54 டி.எம்.சி., வரையில் தண்ணீர் அவர்களிடம் உள்ளது. சிறு சிறு அணைகளை கட்டி வைத்து, தண்ணீரை தேக்கி வைத்து தர மறுக்கிறது.
காவிரி ஆணையம் சார்பில் 13ம் தேதி நடந்த கூட்டத்தில், வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீரை தரலாம் என, அவர்களே கூறினர். ஆனால், அவர்கள் கூறியபடியே செய்யவில்லை. 5,000 கன அடி, தற்போது தருவதாக கூறினாலும், உத்தேசமாக, 3,000 கன அடி தண்ணீர்தான் வருகிறது. மனம் இருந்தால் தண்ணீர் தரலாம்; ஆனால், அது அவர்களுக்கு இல்லை.
5,000 கன அடி
கர்நாடகா இவ்வாறு நடந்து கொள்ளும் நிலையில், மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை, கேட்டோம். வறட்சி காலங்களில் தண்ணீரை பங்கிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.
அதை வலியுறுத்தித் தான், கோர்ட்டுக்கு போகப் போவதாக கூறினோம். நாங்கள் வந்து, மனு தந்தால் வாங்கி வைத்துக் கொள்வதும், அவர்கள் வந்து தந்தால், அந்த மனுவையும் வாங்கி வைத்துக் கொள்வதும்தான் நடக்கிறது என்றோம்.
இதையடுத்து, காவிரி ஆணையத்தின் தலைவரை அழைத்து அமைச்சர் விபரம் கேட்டார். அவரும் ஒரு கணக்கை கூறினார். குடிநீர் தேவை இருப்பதால், 5,000 கன அடிதான் தர முடியும் என்றார்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே குடிநீருக்கு என தண்ணீர் தந்தாகிவிட்டது. பின் மீண்டும் மீண்டும் குடிநீர் தேவை என கேட்டால் என்னதான் செய்வது.
தமிழகத்திலும் குடிநீர் தேவை உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினோம். நாங்கள் என்ன செய்வது என்றார் அமைச்சர். அதற்கு, 'நீங்கள் என்ன செய்வது என்றால், மத்திய அரசு எதற்குதான் இருக்கிறது' என, கேட்டோம்.
எனவே, உச்ச நீதிமன்றத்துக்கு போகப்போவதை அமைச்சரிடம் கூறிவிட்டு வந்துள்ளோம். அதுவரையில், 3,000 அல்லது 3,500 கன அடி தண்ணீரையாவது ஒழுங்காக தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என, கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர், கூறினார்.
-- நமது டில்லி நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!