அரசியல்வாதிகளின் குடும்பத்தில் பெண்களை குறிவைத்து துன்புறுத்தல்
திருவனந்தபுரம் கேரளாவில், பிரபல அரசியல் தலைவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை குறிவைத்து, ஆன்லைனில் துன்புறுத்தல் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு சமீபகாலமாக, பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை குறிவைத்து, சமூக வலைதளங்களான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இழிவான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., ஏ.ஏ.ரஹிமின் மனைவி அம்ருதா சதீஷன், 'கோட்டயம் குஞ்சச்சன்' என்ற பேஸ்புக் கணக்குக்கு எதிராக, கடந்த 17ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதே போல், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகள்கள் மரியா உம்மன், அச்சு உம்மன் ஆகியோரும், ஆன்லைனில் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக புகார் அளித்து உள்ளனர்.
இது போன்று, பல்வேறு அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, கேரள சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைன் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!