ADVERTISEMENT
ஷியோபூர்,மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், உடல்நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு ஆண் சிவிங்கி புலிகள், உடல்நலம் தேறியதை அடுத்து, கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டன.
நம் நாட்டில் சிவிங்கி புலிகளின் இனம் அழிந்ததை அடுத்து, அவற்றை மீட்டெடுக்கும் வகையில், 2022 செப்., 17ல், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு, ம.பி.,யின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன.
இதே போல், தென் ஆப்ரிக்காவில் இருந்து, 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து, ஒரு பெண் சிவிங்கி புலி, நான்கு குட்டிகளை ஈன்றது.
மொத்தம், 24 சிவிங்கி புலிகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மூன்று குட்டிகள் உட்பட ஒன்பது சிவிங்கி புலிகள் உயிரிழந்தன. தற்போது, 15 சிவிங்கி புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குனோ தேசிய பூங்காவில், உடல்நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்ட வாயு, அக்னி என்ற இரு சிவிங்கி புலிகள், உடல்நலம் தேறியதை அடுத்து, கூண்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜூன் 27 முதல், கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டு, வாயு, அக்னி சிவிங்கி புலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
'தற்போது உடல்நலம் தேறியதை அடுத்து, வழக்கமான இடத்தில் சிவிங்கி புலிகள் விடப்பட்டன' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!