முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை
அ.தி.மு.க., ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. இவரிடம், 1991- -- 1996ம் ஆண்டுகளில் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தவர் வெங்கடகிருஷ்ணன்.
தன் வருமானத்துக்கு அதிகமாக, 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, வெங்கடகிருஷ்ணன், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 'வெங்கடகிருஷ்ணன், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை' எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012 ஜன., 11ல் தீர்ப்பளித்தது.
மேல் முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து, அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 'ஆவணங்களை ஆய்வு செய்ததில் வருமானத்துக்கு அதிகமாக வெங்கடகிருஷ்ணன், அவரது மனைவி சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
இதையடுத்து, தண்டனை விபரம் குறித்து விளக்கமளிக்க, இருவரையும் ஆஜராகும்படியும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் தண்டனை குறித்து கேள்வி எழுப்பியபோது, 'குறைந்த தண்டனை விதிக்க வேண்டும்' என கோரினர்.
அவகாசம்
மேலும், 'கடந்த 27 ஆண்டுகளாக, இந்த வழக்கால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் வழங்க வேண்டும்' என, இருவர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பு:
வழக்கில் வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மஞ்சுளாவுக்கு, 18 மாதங்கள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைய, அக்டோபர் 25 வரை, அவகாசம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!