வ.உ.சி., நகரில் வடியாத மழை நீரும் தீராத துயரமும்!
தண்டையார்பேட்டை, சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர் நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்புகளின் பின்புறம், வ.உ.சி., நகர் குடிசை பகுதி உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.சமீபமாக பரவலாக பெய்து வரும் கன மழையால், இப்பகுதி முழுதும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் நின்று ஒரு வாரம் கடந்தாலும் தண்ணீர் வடிவதில்லை.
மழையின் போது வ.உ.சி., நகர் மக்கள் பாதிக்கப்படுவது இன்று நேற்று அல்ல; கடந்த பல ஆண்டுகளாக இந்த நிலைமை தான்.
தற்போது, வ.உ.சி., நகரில் மழை நீருடன் கலந்து தேங்கி உள்ள கழிவு நீரால், ஒருபுறம் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.மேலும், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் படையெடுப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில் பீதியுடன் நாட்களை கடத்துகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக வீட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிப்பறை தண்ணீரும் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. வீட்டில் தேங்கியுள்ள கழிவுநீரால், ஒரு வாரமாக வீட்டில் சமைக்கவில்லை. எம்.எல்.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் என, யாரும் எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வரவில்லை.
பா.சாந்தி, 55,
வ.உ.சி., நகர் குடிசை பகுதி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!