Load Image
Advertisement

தண்ணீர் பந்தல் ரயில்வே பாலம் கட்டுவாங்களா விசாரணைக்கு வருகிறது மேல்முறையீடு வழக்கு

கோவை;கோவை, தண்ணீர் பந்தல் ரோடு ரயில்வே மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கு, இம்மாத இறுதியில் விசாரணைக்கு வருகிறது.

கோவை - அவிநாசி ரோடு மற்றும் சிங்காநல்லுார் பகுதியில் இருந்து வருபவர்கள், விளாங்குறிச்சி ரோட்டுக்குச் செல்ல, தண்ணீர் பந்தல் ரோடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், தண்ணீர் பந்தல் ரோட்டில், 305 மீட்டர், விளாங்குறிச்சி ரோட்டில் 217 மீட்டர், ரயில்வே தண்டவாள பகுதியில், 30 மீட்டர் என, 552 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்ட, 2006ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு, ரூ.12.65 கோடி ஒதுக்கப்பட்டது.

ரயில்வே பகுதியில் மட்டும் ரயில்வே துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு, அந்தரத்தில் நிற்கிறது. அதன் இருபுறமும் இன்னும் ஓடுதளம் அமைக்கவில்லை.

நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்பட்ட தாமதத்தால், திட்டம் துவங்கி, 17 ஆண்டுகளாகியும் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், சர்வீஸ் ரோடு போடுவதற்கு, 2-2.5 மீட்டர் அகலத்துக்கு, 35 பேரின் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. நில உரிமையாளர்கள் சிலர், சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டது.

தி,மு.க., ஆட்சிக்கு வந்ததும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணையில், வழக்கு தள்ளுபடியானதை தொடர்ந்து, தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் திருத்திய மதிப்பீடு தயாரித்தனர்.

இதற்கிடையே, நில உரிமையாளர்களில் வாரிசுதாரர் ஒருவர் மேல்முறை யீடு செய்த வழக்கு, இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது. இவ்வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே, இந்த மேம்பாலம் பணி மீண்டும் துவங்கும்.

மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கான சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தி விட்டோம். அரசு தரப்பில் கூடுதல் நிதி ஒதுக்கி, வேலையை துவக்கி விட்டோம்.

தண்ணீர் பந்தல் ரோடு மேம்பாலத்துக்கும் விரைந்து தீர்வு காணப்படும். திருத்திய மதிப்பீடு தயாராக இருக்கிறது. மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்.

நிதி ஒதுக்கீடு பெற்று, மேம்பாலம் கட்டப்படும். அதன்பின், அவிநாசி ரோட்டில் இருந்து தண்ணீர் பந்தல் ரோட்டுக்கும், தண்ணீர் பந்தல் ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு மற்றும் மசக்காளிபாளையம் ரோட்டுக்கும் எளிதாக வரலாம்; டைடல் பார்க் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement