ADVERTISEMENT
செங்குன்றம், புழல், இந்தியன் வங்கி சந்திப்பு முதல் பாடியநல்லுார் வரை, 5 கி.மீ.,க்கு, தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவை, மழை மற்றும் கழிவுநீர் தேங்கி, மிக மோசமாக சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளில், ஆங்காங்கே, 5 முதல் 10 அடி அகலத்திற்கும், அரை அடி ஆழத்திற்கும், பள்ளங்கள் உருவாகி உள்ளன.
இச்சாலைகளில் பயணிக்கும், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் தவிர, அனைத்து வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், நல்லுார் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், சாலை பராமரிப்பு பெயரளவிற்கு கூட நடப்பதில்லை. குறிப்பாக, இரு பக்க அணுகு சாலையையொட்டி உள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி, சாலைகள் சேதமடைந்து, கழிவுநீர் குளமாக மாறி விட்டன. பல ஆண்டுக்கு முன் சம்பிரதாயமாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் துார்ந்து போய் விட்டது.
செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு முதல், வடகரை மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் தண்டல் கழனி ஜி. என்.டி., சாலை சந்திப்பு முதல் புழல் இந்தியன் வங்கி சந்திப்பு வரை, இரு பக்கமும் உள்ள அணுகு சாலைகள், போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் சேதமடைந்துள்ளன.
நேற்று முன் தினம் இரவும், வியாபாரி ஒருவர், விற்பனைக்கான கோழி முட்டைகளை, தனது 'சுசுகி' ரக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது, செங்குன்றம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளத்தால், நிலைதாடுமாறி விழுந்து காயமடைந்தார்.
அதில், ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகள் உடைந்து சேதமாயின.
இது குறித்து, செங்குன்றம், மாதவரம் போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பராமரிப்பு பிரிவில், தொடர்ந்து புகார் செய்தும், சாலையை சீரமைக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!