ADVERTISEMENT
பெரம்பூர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, 2010ல் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.
சுற்றுவட்டார பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக இப்பூங்கா உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக இங்கு பராமரிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மரங்களின் தாழ்வான கிளைகள் வெட்டப்படாமல் நடைபயிற்சி செய்வோருக்கு இடையூறாக உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் பல உடைந்துள்ளன.
செயற்கை நீரூற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. ஊஞ்சலில் இருந்த மரப்பலகையும், சீசா விளையாட்டில் இருந்த இருக்கைகளும் காணாமல் போய்விட்டன.
மரக்கன்றுகள் நடப்படாமல், அப்படியே வைக்கப்பட்டு பாழாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பூங்காவில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பூங்காவுக்கு வருவோரை கடித்து பயமுறுத்தி வருகிறது. இது குறித்து மாநகரட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
அவலம்
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பூங்கா பராமரிப்பு பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு மாநகராட்சி தர வேண்டிய பணம் நிலுவையில் வைத்துள்ளதால், பராமரிப்பு பணிகளை ஒப்பந்த நிறுவனம் கிடப்பில் போட்டுள்ளது என, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. செயற்கை நீரூற்று குப்பை தொட்டியாகிவிட்டது.
பூங்காவை பராமரிப்பதற்கான உபகரணங்கள் இல்லை என, பராமரிப்பு பணியாளர்கள் கூறுகின்றனர். இதெல்லாம் இல்லாமல் இவர்கள் எப்படி ஒப்பந்தம் எடுத்தனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சென்னையிலேயே மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான முரசொலி மாறன் மேம்பால பூங்கா பராமரிப்பை முறைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!