சிட்டி கிரைம்
திருநங்கைகள் போலீசில் மனு
நடிகர்கள் விஷால், எஸ்.ஜெ.சூர்யா நடித்து கடந்த, 15ம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் மார்க் ஆன்டனி. இத்திரைபடத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி, ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், திருநங்கைகள் சார்பில் புகார் மனு அளித்தார்.
பைக் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலை
தென்காசி மாவட்டம், வெள்ளகுளத்தைச் சேர்ந்தவர் ராம்குமரன், 27. இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனயில் பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள நர்சிங் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கு சொந்தமான பைக்கை, மருத்துவமனை டூவீலர் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தார். இதை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். ராம்குமரன் புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை
கோவை காந்திபுரம் ஆர்.வி. ஓட்டல் ரவுண்டானா அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒருவர் ஏறினார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை எச்சரிக்கை செய்தும், அவர் மின்சார வயரை தொட்டார். இதில் அவர் மின்சாரம் பாய்ந்து பலியானார். தகவலறிந்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காட்டூர் போலீசார், விசாரணை நடத்தினர். அதில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஹ்னா மஜ்கி, 48 எனத் தெரிந்தது. வழக்குப்பதிந்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் கொலை; குற்றவாளியை பிடிக்க தனிப்படை
கோவை மாவட்டம் வால்பாறை காந்திநகரை சேர்ந்தவர் ராஜேஷ், 40. இவர் குடும்பத்தினரை பிரிந்து கடந்த, 10 ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்தார். சமையல் வேலைக்கு சென்று வந்த அவர் நேரு ஸ்டேடியம் அருகே, பிளாட்பாரத்தில் தங்கினார். ஒரு வாரத்துக்கு முன் சமையல் கான்டிராக்ட் தொழிலை, காட்டூர் பார்க் தெருவை சேர்ந்த மணிவண்ணன், 38 உடன் இணைந்து மேற்கொண்டார்.
இந்நிலையில், ஆடிஸ் வீதியில் உள்ள பெட்டிக்கடை முன் கடந்த, 18ம் தேதி இரவு ராஜேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணையில், பிளாட்பாரத்தில் தங்கி சப்ளையராக வேலை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பென்னி, 36, என்பவருடன் சம்பவத்தன்று, தகராறு ஏற்பட்டதும், பென்னி உருட்டுக்கட்டையால் ராஜேஸை தாக்கி கொலை செய்ததும் தெரிந்தது. பென்னியை பிடிக்க ஏற்படுத்தப்பட்ட, தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!