திருச்சி ஆவினில் ரூ.82 லட்சம் மெகா மோசடி லிட்டர் பாலை ரூ.2,060க்கு வாங்கியதாக பொய் கணக்கு
திருச்சி மாவட்டம் சோபனபுரம் பால் கூட்டுறவு சங்கத்தில், பால் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த, திருச்சி முதுநிலை பால் ஆய்வாளர் ராஜா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார்.
போலி பட்டுவாடா
இவர், திருச்சி மாவட்ட பால்வளத்துறை துணை பதிவாளரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை:
இதில், ஏப்., 1ம் தேதி வரை 13 உறுப்பினர்களிடம் பால் கொள்முதல் செய்ததாக பதிவுகள் இருந்தன.
கடந்த, 2020 ஏப்., 25ம் தேதி நிர்வாக குழு கூட்டம் வாயிலாக, புதிதாக, 147 உறுப்பினர் சேர்ந்ததாக தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 27ம் தேதி முதல் சங்கத்தில், 160 உறுப்பினர், பால் வழங்கியதாக கொள்முதல் ஆவணங்கள் வாயிலாக தெரிய வருகிறது.
பணப்பட்டுவாடா பதிவேட்டின்படி 2020 ஏப்., 1 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை சங்க உறுப்பினர்களுக்கு, 82.01 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சங்க உறுப்பினர்களிடம் கொள்முதல் செய்ததற்கு எந்த ஆவணமும் இல்லாமல், போலியாக பட்டுவாடா செய்ததாக கணக்கு காட்டி ஏமாற்றியுள்ளனர்.
பட்டுவாடா ஆவணங்களும் நகைப்புக்கு உரியதாக உள்ளன. ஒரு உறுப்பினர், ஒரு நாளில், 25 முறை, 27 முறை, 29 முறை பால் ஊற்றியதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு உறுப்பினரும் ஊற்றிய பாலின் அளவை குறிப்பிடாமல், பால் பட்டுவாடா தொகை, விருப்பப்படி எழுதப்பட்டுள்ளது.
கிரிமினல் குற்றம்
சங்கத்திற்கு பால் எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லாமல், ஆவினுக்கு பால் அனுப்பபட்டுள்ளது.
கொள்முதல் மற்றும் பட்டுவாடா பதிவேடுகளை ஆய்வு செய்து எடுத்த புள்ளி விபரங்களை பார்க்கும் போது, ஒரு உறுப்பினர் ஊற்றிய லிட்டர் பாலுக்கு சராசரியாக, 2,060 ரூபாய், 509 ரூபாய், 133 ரூபாய் என, கொள்முதல் விலையாக வழங்கப்பட்டு உள்ளது.
தனியாரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூட்டுறவு சட்டத்திற்கு புறம்பாக சங்க தலைவர் மற்றும் செயலர் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளது தெளிவாகிறது. இந்திய குற்ற தண்டனை சட்டப்படி, இது கிரிமினல் குற்றமாகும். எனவே, இவர்கள் இருவர் மீதும் குற்றவழக்கு தொடர பரிந்துரை செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஆவின் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது, பால்வளத்துறையில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!