கல்லுாரி மாணவர்கள் ரகளை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
அம்பத்துார், அம்பத்துார் அடுத்த மேனாம்பேடு, கருக்கு பகுதியில், 'அன்னை வயலெட் கலை அறிவியல் கல்லுாரி' உள்ளது. அங்கு, அம்பத்துார், ஆவடி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை, அங்கு படிக்கும் மாணவர்களில், 30க்கும் மேற்பட்டோர், கூட்டமாக சேர்ந்து, இளைஞர் ஒருவரை விரட்டி சென்று, சரமாரியாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லுாரி அமைந்துள்ள பகுதியை சேர்ந்த அசோக், 38 என்பவர், நேற்று காலை, 8:30 மணி அளவில், தன் குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு, மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கல்லுாரி மாணவர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக, மொபைல்போனில், குரூப் 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தனர்.
அசோக், அவர்களிடம், 'அடுத்தவர்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்காதீர்கள்' என, கண்டித்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், கல்லுாரி மாணவர்கள், அவரை விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த வழியாக சென்ற, 'டாடா சுமோ' காரின் கண்ணாடியையும், மாணவர்கள் அடித்து சேதப்படுத்தியதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட அசோக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசோக்கின் உறவினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்லுாரியை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் குறித்து, கல்லுாரி நிர்வாகத்திடம் அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!