தினமும் இரு முறை கொசு மருந்து அடிக்க வேண்டும்
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் ராஜன் தலைமையில் நேற்று, ஆற்காடு சாலையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி பங்கேற்றார்.
இதில், 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின் பேசியதாவது:
மதுரவாயலில் பிள்ளையார் கோவில் தெரு, பெருமாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு இல்லை.
ஐந்து நாட்களுக்கு ஒரு முறை லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பிளாஸ்டிக் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மதுரவாயல், 11வது தெருவில் உள்ள 6 வயது குழந்தைக்கு, நேற்று டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன் பேசியதாவது:
நெற்குன்றம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், தினமும் காலை மற்றும் மாலை நேரம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மழை நீர் வடிகால் துார்வாரப்படாமல் உள்ளதால், சாலையில் மழை நீர் தேங்கி நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 147வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரமணி மாதவன் பேசியதாவது:
மதுரவாயல் கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், சிதிலமடைந்த மின் கம்பங்களை மழைக்காலத்திற்கு முன், மின் வாரிய ஊழியர்கள் மாற்றி அமைத்தால், பெரும் விபத்துகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன் பேசியதாவது:குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த சாலைகளில், தார்ச்சாலை அமைக்க சீர் செய்யப்படும் போது, குடிநீர், கழிவு நீர் குழாய் சேதமடைந்து விடுகிறது. இதனால், மீண்டும் சாலை பணிகள் கிடப்பில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
காமராஜர் சாலை, மேட்டுக்குப்பம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மின் கம்பங்கள் போடப்பட்டுள்ளன. புது சாலை அமைக்கும் முன் அவற்றை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 150வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஹேமலதா பேசியதாவது:
வார்டில் குடிநீர் வினியோகம் குறைவாகவும், மெதுவாகவும் வருகிறது. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க அரை மணி நேரம் ஆகிறது. அதுவும், ஒன்றரை மணி நேரத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 150வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாரதி பேசியதாவது:
மெட்ரோ ரயில் பணியால், அடிக்கடி குடிநீர் குழாய் சேதமடைகிறது. இதனால், மாதத்தில் 20 நாட்கள் வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. அத்துடன் பாதாள சாக்கடை சேதமடைந்த சாலையில் கழிவு நீர் தேங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!