கோவை மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் நடத்துவோர், அரசு ஊழியர்கள் என, யாரும் நன்றாக இல்லை.
உழைக்காமலேயே மிகப்பெரிய தலைவராக உதயநிதி வந்திருக்கிறார். ஏழைகளுக்காக அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி, குடும்ப சொத்தாக மாறி விட்டது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், பழனிசாமி கட்சி பொதுச்செயலராக இருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செயல்படுவோம். எங்களுக்கு எதிரி தி.மு.க., தான்.
கூட்டணியில் யார் இருந்தாலும், எங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டணியில் இருந்து கொண்டு, என்ன வேண்டுமானாலும் பேசினால், எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஜெயலலிதாவை பற்றி பேச, அண்ணாமலைக்கு தகுதி இல்லை. தீண்டாமை ஒழிக்க ஈ.வெ.ரா., போராடினார். ஹிந்தி ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர் அண்ணாதுரை. அவரை பற்றி பேசவும், அண்ணாமலைக்கு தகுதி இல்லை.
உண்மைக்கு புறம்பாக, கருத்துக்களை திரித்து பேசக் கூடாது; அதை தவிர்த்திருக்க வேண்டும். கொள்கையில் கூட்டணி இல்லை; கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். தேர்தலுக்காக, கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, பா.ஜ., ஆட்சியின் போது, 23 நாட்கள் பார்லிமென்டை அ.தி.மு.க.,வினர் முடக்கினர்.
பொதுச்செயலர் பழனிசாமி, எங்களை கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதிப்போம். லோக்சபா தேர்தலில், 40 தொகுதியிலும் வெல்வோம். நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு வேலுமணி பேசினார்.
வேலுமணி பேசுகையில், ''சிண்டு முடியும் வேலையை, தி.மு.க., மற்றும் பா.ஜ.,வில் ஒரு குரூப் செய்கிறது. 'தினமலர்' நாளிதழ், சிண்டு முடிந்து வருகிறது. அந்நாளிதழ் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், ஒரு கட்சிக்காக, மற்ற கட்சிகள் இருக்கக் கூடாது என நினைக்கிறது,'' என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராக இருக்கிறது. கோவை மாவட்டத்தை, தி.மு.க., அரசு புறக்கணிக்கிறது. 40 தொகுதிகளையும் அ.தி.மு.க.., கூட்டணி கைப்பற்றும். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது.
அண்ணாதுரை ஆரம்பித்த தி.மு.க., வாயை திறக்கவில்லை. எங்களுக்கு கொள்கை முக்கியம். திராவிட கொள்கையை அ.தி.மு.க., பாதுகாத்து வருகிறது. எங்களுக்கு தலைவர் பழனிசாமி தான். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படி செயல்படுவோம். அவரது தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!