தொடர்ந்து தண்ணீர் கசிந்து வெளியேறும் தில்லை கங்காநகர் சுரங்கப்பாலம் சீரமைப்பு
நங்கநல்லுார்,மண்டல குழு கூட்ட விவாதத்திற்கு பின், நங்கநல்லுார், தில்லை கங்காநகர் சுரங்கப்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இருந்து வெளியேறும் ஊற்று நீர் செல்லும் வழித்தடம் சீரமைக்கப்பட்டு, சுவர், சாலையில் படிந்திருந்த பாசியை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னை, வேளச்சேரி, விஜயநகர் மேம்பால ரயில் நிலையத்தையும் ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் உள்வட்டச்சாலையில் நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் பகுதியில் சுரங்கப்பாலம் அமைந்துள்ளது.
தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில், ஊற்று போல தண்ணீர் வெளியேறி தேங்குவது தொடர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் ரூபாய் செலவில் பக்கவாட்டு சுவர் சீரமைக்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து கசிந்து வெளியேறும் தண்ணீரை அகற்றவும், மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றவும் நிரந்தரமாக மின் மோட்டார் வசதி செய்யப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்து வரும் மழையால் சுரங்கப்பாலத்தில் நீர் ஊற்று அதிகரித்து, அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. சுரங்கப்பாலத்தில் தரைப்பகுதியில் தேங்கும் நீரால் பாசி பிடித்திருந்தது.
அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகளை சந்தித்து வந்தனர். இது குறித்து மண்டல குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சுரங்கப்பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஊற்று நீர் வழித்தடம் சீரமைக்கப்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை, சுவரில் இருந்த பாசியும் அகற்றப்பட்டு வருகிறது.
ஆலந்துார், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாலம் அமைந்துள்ள நிலையில் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!