ADVERTISEMENT
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுாரில் மீட்கப்பட்ட 1,860 கோடி ரூபாய் மதிப்புள்ள 62 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.
சோழிங்கநல்லுார் தாலுகா, நுாக்கம்பாளையம் பிரதான சாலையில், சர்வே எண்: 574ல், அரசுக்கு சொந்தமான 62.07 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 1,860 கோடி ரூபாய்.
இதில் குறிப்பிட்ட பகுதி இடம், முன்னாள் படை வீரர்களுக்கு பட்டா வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வருவாய்த்துறை விசாரணையில், போலி பெயர்கள், ஒரே நபரின் வீட்டில் உள்ள உறவினர்கள் பெயர்கள் என, பொய்யான தகவல்கள் தெரிவித்து விண்ணப்பித்தது தெரிந்தது.
இதையடுத்து, 2012ம் ஆண்டு அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கில் கடந்த 4ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், இடத்தை மீட்டு, அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 6ம் தேதி, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், இடம் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சுற்றி, 2.5 கி.மீ., துாரத்தில், 10 அடி அகலம் வீதம், 7 அடி உயரத்தில் சிமென்ட் துாண்கள் அமைக்கப்படுகின்றன. அதில், இரண்டடுக்கு கொண்ட இரும்பு வலை கட்டி பாதுகாக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இப்பணி முடிந்த பின், இடத்தை மீட்டதற்கான ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!