ADVERTISEMENT
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் மக்கள் தொகைக்கு ஏற்ப, தடையற்ற குடிநீர் வழங்க, கடந்த 2019ல் துவக்கப்பட்ட குடிநீர் திட்ட பணிகள் காலம் கடந்து, தற்போது முடியும் நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்கு 187, 188 என, இரு வார்டுகள் உள்ளன. மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதுபோல் ஜல்லடையன்பேட்டை, மாத்துார், உத்தண்டி ஆகிய இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால், நான்கு இடங்களுக்கும் சேர்த்து, 196.13 கோடி ரூபாயில், 'விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்' எனும் பெயரில், கடந்த 2019 பிப்ரவரியில் பணிகள் துவக்கப்பட்டன.
இதன்படி மடிப்பாக்கம், ஜல்லடையன்பேட்டை, மாத்துார், உத்தண்டி ஆகிய நான்கு இடங்களில் முறையே 50, 13, 12, 8 லட்சம் லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.
தவிர, மேல் நிலை குடிநீர் தொட்டிக்கு நீரை ஏற்றும் முன், அதைச் சேமித்து வைக்கும் கொள்கலன் பகுதியாக, முறையே 15, 2, 2, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டன.
மேற்கண்ட நான்கு இடங்களுக்கும், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து குழாய்கள் வாயிலாக நீர் கொண்டுவரப்படும்.
அதன்படி, 213.8 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டன.
திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, 2019ல் பணிகள் துவக்கப்பட்டு, 2021 ஜனவரியில் பணிகள் முடிவுறும் என, தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டின் துவக்கத்தில் மடிப்பாக்கம் தவிர, இதர இடங்களில் பணிகள் முடிவுற்றன.
இந்நிலையில், மடிப்பாக்கம் பகுதிக்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எதிரே, 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் மந்த கதியில் நடந்ததால், தற்போது வரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
சென்னையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கடும் சிரமம் ஏற்பட்டது.
எந்தெந்த சாலை வழியாக குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் என, நாங்கள் திட்டமிட்டு பணிகளைத் துவக்கிய பின்னர், மழைநீர் வடிகால் பணிகளுக்கான சாலை வெட்டு குறுக்கிட்டு, எங்கள் பணிகளை தாமதப்படுத்தி விட்டது.
மடிப்பாக்கம் குடிநீர் திட்டத்திற்காக, 80.45 கோடி ரூபாய் செலவில், 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை தொட்டியும், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ் நிலை தொட்டி மற்றும் குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகளில், 90 சதவீதம் முடிந்துவிட்டன.
அடுத்த மாதம், சோதனை நடைபெற்று முடிந்து, ஆண்டின் இறுதியில் குடிநீர் வினியோகம் துவங்கிவிடும்.
இத்திட்டத்தின் வாயிலாக மடிப்பாக்கத்தில் உள்ள வார்டு 187 மற்றும் 188 ஆகிய பகுதிகளில், 8,770 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறும். நாளொன்றுக்கு 86 லட்சம் லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!