ADVERTISEMENT
சென்னை, சென்னையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 270 கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கலில், 'ஷவர்மா' சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் இறைச்சி மற்றும் அசைவ கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் அரும்பாக்கம், அம்பத்துார், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 270 கிலோ கெட்டுப்போன சிக்கன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கு மாம்பலத்தில் இரண்டு கடைகள், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் ஒரு கடை என, மூன்று கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறைச்சி மற்றும் அசைவ கடைகளில் சோதனை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி சுகாதார துறையினர், நேற்று திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் துரித உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜே.என்.சாலை - ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள 'ஷவர்மா' கடைகளில் சோதனையிட்ட போது, அங்குள்ள ஒரு கடைக்கு அனுமதி பெறவில்லை என தெரிந்ததால், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கடையில் இருந்த கோழி இறைச்சியை சோதனை செய்த போது, அளவுக்கு மீறி நிறம் சேர்த்ததும், ஏற்கனவே வேக வைத்த இறைச்சியை, குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, கடைக்கு 'நோட்டீஸ்' அளித்து, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!