சென்னையில் 3 நாள் நடந்த சர்வதேச சமையல் கண்காட்சி
மதுரை, சென்னையில் தென்னிந்திய செப்ஸ் அசோஷியேசன் சார்பில் ஆறாவது சர்வதேச சமையல் மற்றும் கண்காட்சி செப்., 15 முதல் 17 வரை மூன்று நாட்கள், சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது.
சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், இயக்குனர் சந்தீப் நந்துாரி, ஆச்சி மசாலா தலைமை இயக்குனர் பத்மசிங் ஐசக், உலக சமையல் கலைஞர்கள் அமைப்பு தலைவர் தாமஸ் கூகுளேர், செப்கள் தாமு, சீத்தாராம், இளங்கோ துவக்கி வைத்தனர்.
செப் தாமு, சீத்தாராம் பேசுகையில், 'மறைந்து போன பல உணவு வகைகளை சமையல் கலைஞர்கள் மிக அழகாக சமைத்து இருந்தனர். உணவுகளை காட்சிப்படுத்திய விதம் அவற்றை உலக தரத்திற்கு எடுத்து சென்றது' என்றனர்.
இலங்கை, மொரிஷியஸ், சிங்கப்பூர், மாலத்தீவு உட்பட சர்வதேச நட்சத்திர ஹோட்டல், உணவகம், பேக்கரி சமையல் கலைஞர்கள், கேட்டரிங் மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வெவ்வேறு சமையல் பிரிவுகளில், போட்டி மற்றும் கண்காட்சியில் பங்கேற்றனர்.
சிறு தானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பாரம்பரிய முறைப்படி தயாரித்த உணவு வகைகள், பார்வையாளர்களை கவர்ந்தது. செப் பரணிதரன், சிங்கப்பூர் மூத்த சமையல் கலைஞர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்து தங்கம், 16 வெள்ளி, 12 வெண்கலத்துடன் கிராண்ட் பை ஜி.ஆர்.டி., ஹோட்டல்ஸ் முதலிடம் பிடித்து, செப் சவுந்தரராஜன் நினைவுக் கோப்பையை வென்றது.
இதில், 5 தங்கம், 8 வெள்ளி, 22 வெண்கலம் பெற்று ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டல்ஸ் இரண்டாவது இடத்தையும், சென்னை ராடிசன் புளூ ஜி.ஆர்.டி., ஒரு தங்கம், 10 வெள்ளி, 20 வெண்கலம் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
கிராண்ட் பை ஜி.ஆர்.டி., ஹோட்டல் செப் யுவராஜ் சிறந்த 'பேஸ்ட்ரி செப்' பட்டம் வென்றார். தரமணி இந்தியன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு சிறந்த பங்களிப்புக்கான விருது வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!