ADVERTISEMENT
சென்னை, மாதவரம் - வியாசர்பாடி ஜி.என்.டி., சாலையில், நடைபாதைகளில் சாலை தடுப்பு அமைப்பதில் குளறுபடிகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாலை பாதுகாப்புக்கு, நடப்பாண்டில் சென்னைக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், 10 கோடி ரூபாயை செலவழித்து மாதவரம் ரவுன்டானா முதல் வியாசர்பாடி வரை ஸ்டீல் பயன்படுத்தி, சாலை நடைபாதைகளை ஒட்டி தடுப்புகள் பொருத்தப்பட்டன.
மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்ததால், அதனை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அகற்றி எடுத்து சென்றுவிட்டனர்.
இப்போது, மீண்டும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மஞ்சள் நிறத்தில், நெடுஞ்சாலைத் துறை லோகோவுடன், சாலை தடுப்புகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. நடைபாதைகளை ஒட்டி இவற்றை பொருத்துவதால், சாலையில் இருந்து பாதசாரிகள் இறங்கி நடப்பது தவிர்க்கப்படும்.
ஆனால், வர்த்த நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றின் கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமாக, சாலை தடுப்புகள் அமைப்பதில் குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இங்குள்ள பல இடங்களில், 10 அடி நீள சாலை தடுப்புகளை இரண்டாவும், மூன்றாகவும் வெல்டிங் வைத்து பிரித்து பொருத்துகின்றனர். இந்த இடைவெளிகளில் நடைபாதை பாதசாரிகள் சாலையை கடக்க முயற்சிக்கும் போது, விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
பல இடங்களில் இந்த இடைவெளிகளை மீண்டும் இணைக்கு வேண்டிய அவசியம் ஏற்படும் என, கருதப்படுகிறது.
அரசு ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீணடிப்பதாகவும், இதனால், ஜி.என்.டி., சாலையில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!