மின் இணைப்புக்கு லஞ்சம் இரு அதிகாரிகளுக்கு கம்பி
செங்கல்பட்டு, திருப்போரூர் அடுத்த இள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர், சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவருக்கு, புதிய வீடு கட்ட ஒப்பந்தம் செய்தார்.
அதன்பின், கட்டுமான பணிக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், ஆழ்துளை கிணறு அமைக்க, தற்காலிக மின் இணைப்பிற்கு, ஒக்கியம்துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் மருதமணி, 49, வணிக வரி ஆய்வாளர் செந்தில்குமார், 46, ஆகியோரை அணுகினார். அவர்கள், மின் இணைப்பு வழங்க, 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சதாசிவம், சென்னை நந்தனத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 2012ம் ஆண்டு, ஜூலை 5ம் தேதி, மின் வாரிய அதிகாரிகளிடம் 3,000 ரூபாயை சதாசிவம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இருவரையும் கைது செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால், உதவி பொறியாளர் மருதமணி, வணிக வரி ஆய்வாளர் செந்தில்குமார், ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை கட்டத்தவறினால், கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!