ரூ.80 லட்சம் பேட்டரிகள் திருடிய கன்டெய்னர் டிரைவர்கள் கைது
திருவொற்றியூர், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் உள்ள, பிரபல தனியார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான கார் பேட்டரிகள், இரண்டு கன்டெய்னர் பெட்டிகளில் கப்பலில் மேற்கு ஆசிய தீவு நாடான பக்ரைனுக்கு சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அங்கு சென்ற போது, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வெளிநாட்டு நிறுவனம் ரேணிகுண்டாவில் உள்ள பேட்டரி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தது.
அதிர்ச்சியடைந்த கார் பேட்டரி நிறுவன அதிகாரிகள் பேட்டரி எடுத்துச் சென்ற லாரியில் இருந்த ஜி.பி.எஸ்., மூலம் பேட்டரி திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, ரேணிகுண்டாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு பேட்டரியை எடுத்து சென்ற கன்டெய்னர் லாரி ஓட்டுனர், ஊழியர்கள், எர்ணாவூரில் வைத்து பேட்டரிகளை திருடியது தெரிய வந்தது.
இது குறித்து எண்ணுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
எண்ணுார் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். இதில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த குருமூர்த்தி, 26, மனோராஜ், 26, கவியரசர், 35, ஆகிய மூவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் பேட்டரிகளை எர்ணாவூர், முல்லை நகரில் உள்ள குடோனில் பதுக்கி வைத்ததோடு, ஆன்லைனில் விற்க முயன்றதும் தெரிய வந்தது. போலீசார், மூவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!